பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது தென்னாப்பிரிக்கா அணி. மேலும் முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தென்னாபிரிக்க அணி முன்னேறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. தங்களின் முதல் உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஆட்டத்திலேயே கோப்பையையும் வென்று விட வேண்டும் என்ற வேட்கையில் இருந்தனர் தென்னாப்பிரிக்க வீரர்கள்.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி பெரிதாக எந்த தவறையும் செய்யவில்லை. ஆனால், 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இதனை அடுத்து தென்னாப்பிரிக்க வீரர்கள் கண்ணீர் விட்ட காட்சிகள் பரிதாபமாக இருந்தது. இனி இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது என அவர்கள் அழுதனர்.

இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 34 ரன்களுக்கு இந்திய அணியின் மூன்று விக்கெட்களை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தியது தென்னாப்பிரிக்கா. அதன்பின் இந்திய அணியின் ரன் குவிக்கும் வேகம் வெகுவாக குறைந்தது.
விராட் கோலி ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற அளவிலேயே ரன் எடுத்தார். அக்சர் பட்டேல் மற்றும் சிவம் துபே ஓரளவு ரன் சேர்த்ததால் இந்திய அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்தது. அடுத்து சேஸிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி முதல் இரண்டு விக்கெட்களை 12 ரன்களுக்கு இழந்தாலும் மூன்றாவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தது. டி காக் 39 ரன்களும். ஸ்டப்ஸ் 31 ரன்களும் சேர்த்தனர்.
அடுத்து வந்த கிளாசன் அதிரடியாக ஆடினார். அக்சர் பட்டேல் வீசிய 15 வது ஓவரில் அவர் 24 ரன்கள் சேர்த்தார். அப்போது போட்டி மொத்தமாக தென்னாப்பிரிக்கா வசம் சென்றது. அந்த சூழ்நிலையில் அந்த அணி 30 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. எனினும், கடைசி 5 ஓவர்களில் பும்ரா, ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷ்தீப் சிங் அபாரமான பந்து வீசி கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் விக்கெட்களை வீழ்த்தினர். அடுத்து அதிரடி பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லாததால் தென்னாப்பிரிக்கா அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. இதை அடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்தது.
கடைசி ஓவரின் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழ்நிலையில் டேவிட் மில்லர் சிக்ஸ் அடிக்க முயன்று விக்கெட்டை பறி கொடுத்தார். அதுவே அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது. வெற்றிக்கு மிக அருகே சென்று தோல்வி அடைந்ததை அடுத்து தென்னாப்பிரிக்க வீரர்கள் கண்ணீர் மல்க சோகத்தில் இருந்தனர்.
1991 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணி தடையில் இருந்து மீண்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆடத் தொடங்கியது. அப்போது முதல் எந்த ஒரு உலகக் கோப்பை தொடரிலும் அந்த அணியால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை. இந்த முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறியும் வெற்றிக்கு மிக அருகே வந்து தோல்வியடைந்தது. இந்த தோல்வி அந்த அணியின் வீரர்களை நிலைகுலையச் செய்துள்ளது.