IND vs SA பைனல் டை ஆனால் இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்படுமா? சூப்பர் ஓவர் விதி என்ன?
பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று (ஜூன் 29) இரவு 8 மணிக்கு துவங்க உள்ளது. மேலும், இந்தப் போட்டி நடைபெற உள்ள பிட்ச் மந்தமாக இருக்கும் எனவும், அதிக ரன்கள் குவிக்க முடியாது எனவும் கூறப்படுகிறது.
இது போன்ற மந்தமான பிட்ச்களில் நடக்கும் போட்டிகள் சில சமயம் "டை" ஆகவும் வாய்ப்பு உள்ளது. அப்படி இந்த போட்டி "டை" ஆனால் என்ன நடக்கும்? உலகக்கோப்பை யாருக்கு வழங்கப்படும்? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

இந்த இறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்படும் என கூறப்படும் நிலையில், நாளையும் (ஜூன் 30, ஞாயிறு) ரிசர்வ் நாளாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. அதனால், இந்த போட்டி இன்று நடத்தி முடிக்கப்படாவிட்டால், நாளை தொடர்ந்து நடத்தப்படும். மேலும், இந்த போட்டியில் இரண்டு அணிகளும் குறைந்த பட்சம் 10 ஓவராவது பேட்டிங் செய்திருந்தாலே முடிவு அறிவிக்கப்படும். இடையே மழையால் போட்டி கைவிடப்பட்டால் இந்தப் போட்டியில் வெற்றியாளர் என யாரையும் அறிவிக்க முடியாது.
அதேபோல, போட்டி டை ஆனால் சூப்பர் ஓவர் நடத்தப்பட வேண்டும். ஒருவேளை மழையால் சூப்பர் ஓவரை நடத்தி முடிக்க முடியாவிட்டாலும் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படும். இது போன்ற சூழ்நிலைகளில் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டால், இரண்டு அணிகளுக்கும் உலகக்கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும். வேறு எதன் அடிப்படையிலும் வெற்றியாளர் என ஒரு அணியை மட்டும் அறிவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒருவேளை சூப்பர் ஓவர் டை ஆனால் மற்றொரு சூப்பர் ஓவர் நடத்தப்படும். இரண்டாவது சூப்பர் ஓவரும் டை ஆனால் மூன்றாவது சூப்பர் ஓவர் நடத்தப்படும். இப்படி முடிவு எட்டப்படும் வரை சூப்பர் ஓவர்கள் நடத்தப்படும். சூப்பர் ஓவரிலும் சில விதிகள் உள்ளன. முதல் சூப்பர் ஓவரில் மூன்று பேட்ஸ்மேன்கள் இடம் பெறும் நிலையில் அவர்கள் இரண்டாவது சூப்பர் ஓவரில் இடம் பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல முதல் சூப்பர் ஓவரில் பந்து வீசிய பவுலர் அதற்கு பின் அடுத்த சூப்பர் ஓவர்களில் பந்து வீச முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஓவரிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றால் உலகக் கோப்பை இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும். அப்படி நடந்தால் அது இரண்டு அணிகளுக்கும் பெரும் ஏமாற்றமாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications