நியூயார்க் : இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 2024 டி20 உலகக் கோப்பை குரூப் சுற்றுப் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். சில நாட்கள் முன்பு வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி ஆடிய அதே பிட்ச்சில்தான் இந்த போட்டியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த போட்டியில் கிடைத்த அனுபவத்தை வைத்து இந்த போட்டியில் பந்துவீச்சை தேர்வு செய்ததாக ரோஹித் சர்மா குறிப்பிட்டார். இதை அடுத்து பயிற்சிப் போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்து விக்கெட் வீழ்த்தாத குல்தீப் யாதவை அணியில் இருந்து நீக்கினார் ரோஹித் சர்மா. இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கும் குல்தீப் யாதவ் அனைத்து உலகக்கோப்பை போட்டிகளிலும் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு முதல் போட்டியிலேயே வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கிறது.
இந்திய அணியில் நான்கு வீரர்களை நீக்கி இருப்பதாக ரோஹித் சர்மா குறிப்பிட்டார். குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சாஹல் ஆகிய நால்வருக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சுழற் பந்துவீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் வாய்ப்பு பெற்றனர். பும்ரா, அர்ஷ்தீப் சிங், சிராஜ் என மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றனர்.
ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இருவரும் துவக்க வீரர்களாகவும், அடுத்த பேட்டிங் வரிசையில் ரிஷப் பண்ட் சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம் பெற்றனர். ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே பகுதி நேர பந்துவீச்சாளர்களாக செயல்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் பிளேயிங் லெவன் : ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்