நியூயார்க் : இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் இடைவேளையில் 10 நொடி விளம்பரம் செய்வதற்கு ரூ.40 லட்சம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நாளை நியூயார்க் மைதானத்தில் நடக்கவுள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான அரசியல் சூழல் காரணமாக ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதி வருகின்றன. இதனால் இந்த ஆட்டங்களுக்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

நாளை நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணிக்கும், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இரு அணிகளின் வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா சாவா ஆட்டமாக அமைந்துள்ளதால், அந்த அணி வீரர்கள் இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்று கூடுதல் முனைப்புடன் உள்ளனர்.
ஏற்கனவே இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ள நிலையில், ரீ-சேல் மார்க்கெட்டில் டிக்கெட் விற்பனை பட்டையை கிளப்பி வருகிறது. அமெரிக்காவில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரில் காண்பதற்காக ரீ-சேல் மார்க்கெட்டில் லட்சக்கணக்கில் டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன.
இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது விளம்பரம் செய்வதற்கான கட்டணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஒரு நொடிக்கு ரூ.4 லட்சமாகவும், 10 நொடி விளம்பரத்திற்கு ரூ.40 லட்சம் கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்ற அணிகளுடன் இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கு விளம்பர கட்டணமாக 10 நொடிக்கு ரு.20 லட்சமாக மட்டுமே உள்ளது.
ஆனால் பாகிஸ்தான் போட்டிக்கு மட்டும் இரு மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த உலகக்கோப்பை தொடரின் போது இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளம்பர கட்டணமாக ஒரு நொடிக்கு ரூ.3 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. கட்டணத்தை பற்றி கவலையின்றி எமிரேட்ஸ், கோகோ-கோலா, சவுதி அராம்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் அதிகளவிலான விளம்பரம் செய்ய ஆர்வமாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.