இந்திய ஐடி ஊழியர்களின் நிம்மதியை கெடுத்த சவுரப் நெட்ரவல்கர்.. டி20 உலகக்கோப்பையால் நடந்த ட்விஸ்ட்
நியூயார்க்: அமெரிக்க அணியை சேர்ந்த இந்திய வம்சாவளி வீரர் சவுரப் நெட்ரவால்கரைப் பார்த்து இந்திய ஐடி ஊழியர்கள் பலர் தங்கள் நிம்மதியை இழந்து இருக்கின்றனர்.
2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான அமெரிக்க அணியில் சவுரப் நெட்ரவால்கர் இடம் பெற்றார். அவர் கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க தேசிய அணியில் இடம் பெற்று சர்வதேச போட்டிகளில் ஆடி வருகிறார். இவர் பிரபல சாப்ட்வேர் நிறுவனமான ஆரக்கிள்-இல் பணி புரிந்து வருகிறார். பகுதி நேரமாக வேலையில் விடுப்பு எடுத்துக் கொண்டு அமெரிக்க அணிக்காக போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

வேகப் பந்துவீச்சாளரான அவர் 2024 டி20 உலகக் கோப்பையில் தனது முத்திரையை பதித்து ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்து வீசிய அவர் நான்கு ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார். மேலும், அந்தப் போட்டியில் சூப்பர் ஓவரையும் அவரே வீசினார். அதிலும், அமெரிக்க அணிக்கு வெற்றி தேடி கொடுத்தார். அப்போது சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் பாகிஸ்தான் அணியை வீழ்த்தினார் என அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியானது.
அடுத்து இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அவர் உலகின் முன்னணி டி20 பேட்ஸ்மேன்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் விக்கெட்களை வீழ்த்தினார். அதுவும் ஏழு பந்துகளில் இந்த இரண்டு ஜாம்பவான்கள் விக்கெட்களை வீழ்த்தி ரசிகர்களை அசர வைத்தார். அவரது சிறப்பான செயல்பாடுகளை பார்த்து கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட இந்திய ஐடி ஊழியர்கள் பலரும் சமூக ஊடகங்களில் அவர் குறித்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டனர்.
அதில் பலரும் அவரைப் பார்த்து பொறாமைப்படுவதாக கூறியுள்ளனர். தங்களுக்கும் கிரிக்கெட் விளையாட ஆர்வம் இருந்தும் தங்களால் விளையாட முடியவில்லையே என ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர். சிலர் சவுரப் நெட்ரவால்கர் போல தாங்களும் கிரிக்கெட் வீரர்களாக ஆகப்போவதாக கூறி உள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்திய ஐடி ஊழியர்கள் தாங்கள் பணி புரியும் நாடுகளில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அணியில் இணைந்து அந்த நாட்டுக்காக விளையாட இருப்பதாக கூறி வருகின்றனர். இதன் மூலம் இந்திய ஐடி ஊழியர்களின் நிம்மதியை கெடுத்து இருக்கிறார் சவுரப் நெட்ரவால்கர்.


Click it and Unblock the Notifications