மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் கம்பீரை பிசிசிஐ தேர்வு செய்ய இருப்பதாகவும் இது குறித்து அவரிடம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், கவுதம் கம்பீர் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வருவது குறித்து சில மூத்த இந்திய வீரர்கள் கலக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் பிசிசிஐ-இடம் கவுதம் கம்பீரை பயிற்சியாளராக நியமிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தகவல் கசிந்து உள்ளது.

கவுதம் கம்பீர் மிகவும் ஆக்ரோஷமான நபர். அவர் கிரிக்கெட் ஆடிய காலங்களிலேயே ஆடுகளத்தில் எதிரணி வீரர்களுடன் மோதலில் ஈடுபடுவார். தற்போது ஐபிஎல் தொடரில் ஆலோசகராக செயல்பட்டு வரும் அவர் வெற்றிக்காக தன் அணி வீரர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என நினைப்பவர். அவர் இருக்கும் வரை அணிக்காக உயிரைக் கொடுத்து ஆடாத வீரர்களுக்கு அணியில் இடம் கிடைக்காது.
மேலும், தோல்வி அடைந்தால் முகத்துக்கு நேராக சரியாக ஆடாத வீரரை பற்றி விமர்சிப்பார் எனவும் கூறப்படுகிறது. இந்திய அணியில் அதிக அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். உலகின் முன்னணி பந்து வீச்சாளராக பும்ரா, உலகின் முன்னணி டி20 பேட்ஸ்மேனாக சூர்யகுமார் யாதவ், கிரிக்கெட் ஜாம்பவான்களான ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றோர் உள்ளனர்.

இந்த சூழலில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டால், அவர் யாருடைய பதவி, அங்கீகாரம், செல்வாக்கு பற்றியும் கண்டு கொள்ள மாட்டார், மிகவும் வெளிப்படையாக பேசுவார் என்பதால் இந்திய வீரர்கள் அவர் தலைமை பயிற்சியாளராக வருவதை விரும்பவில்லை என கூறப்படுகிறது.
அதே சமயம் சமூக ஊடகங்களில் கவுதம் கம்பீரை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். 2024 ஐபிஎல் தொடரில் கவுதம் கம்பீரை ஆலோசகராக நியமித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடித்ததோடு, இறுதிப் போட்டிக்கும் முன்னேறி இருப்பதை சுட்டிக் காட்டி, இந்த காரணத்துக்காகவே அவரை இந்திய அணிக்கு அழைத்து வர வேண்டும் என கூறி வருகின்றனர்.
முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கை பிசிசிஐ அணுகியதாகவும், அவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக வர சம்மதம் தெரிவிக்கவில்லை. அதன் காரணமாகவே கவுதம் கம்பீரை பிசிசிஐ அணுகியதாக சொல்லப்படுகிறது.