என்னங்க இப்படி சொல்றீங்க.. ஐபிஎல்-ஐ வைத்து கணக்கு போட்ட வீரர்கள்.. ஆப்பு வைத்த பிசிசிஐ
மும்பை : இந்திய டி20 அணியில் இடம் பெற்று 2024 டி20 உலகக்கோப்பையில் ஆடி விட வேண்டும் என பல இந்திய வீரர்கள் முயற்சி செய்து வருகின்றனர். சர்வதேச அனுபவம் உள்ள கே எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்றவர்களே இந்திய அணியில் இடம் பெற போராடி வருகின்றனர்.
2024 ஐபிஎல் தொடர் முடிந்த உடன், 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளதால் ஐபிஎல் தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உலகக்கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியில் இடம் பெற அந்த சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்களும், பல இளம் வீரர்களும் முட்டி மோத திட்டமிட்டு இருக்கின்றனர்.

ஆனால், பிசிசிஐ தரப்பில் அது எல்லாமே வீண் வேலை என கூறப்படுகிறது. அதாவது 2024 உலகக்கோப்பைக்கான இந்திய டி20 அணிக்கு 15 முதல் 18 வீரர்கள் கொண்ட உத்தேச அணியை ஏற்கனவே தேர்வுக் குழு இறுதி செய்து விட்டதாகவும், அதில் இருந்தே பெரும்பாலான வீரர்கள் உலகக்கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது.
2024 ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக செயல்படும் ஒன்று, இரண்டு வீரர்களுக்கு வேண்டுமானால் கடைசி நேரத்தில் வாய்ப்பு கிடைக்கலாம். மற்றபடி ஏற்கனவே இறுதி செய்து வைத்துள்ள வீரர்கள் பட்டியலை வைத்தே 2024 உலகக்கோப்பைக்கான டி20 அணி தேர்வு செய்யப்படும்.
அந்த உத்தேச அணியில் ரோஹித் சர்மா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்டியா, திலக் வர்மா, பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய் ஆகியோர் உள்ளதாக பிசிசிஐ வட்டாரம் கூறுகிறது. இவர்களில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் மட்டுமே மாற்று வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய தேவை ஏற்படும்.


Click it and Unblock the Notifications