மும்பை : 2024 டி20 உலகக்கோப்பை வரும் ஜூன் மாதம் முதல் நடைபெற உள்ளது. 2007 டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்தியா இதுவரை ஒருமுறை கூட டி20 உலகக்கோப்பை வெல்லவில்லை. அதற்கு பின் ஒரு முறை கூட இறுதிப் போட்டி வரை முன்னேறவும் இல்லை.
மேலும், 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டி வரை முன்னேறி இந்திய அணி தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட வடுவும் சேர்ந்து கொண்டதால், 2024 டி20 உலகக்கோப்பை வென்றே தீர வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்திய அணி செயல்பட்டு வருகிறது.

ஏற்கனவே, ஆடிய டி20 தொடர்களின் அடிப்படையில் பிசிசிஐ 11 இந்திய வீரர்களை தேர்வு செய்து இருக்கிறது. இதில் பந்துவீச்சாளர்களில் மட்டுமே கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேட்டிங்கில் நான்கு முக்கிய வீரர்களை தேர்வு செய்துள்ளது பிசிசிஐ.
அவர்களில் இருவர் தவிர்க்க முடியாத மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி. ரோஹித் துவக்க வீரராகவும், விராட் கோலி மூன்றாம் வரிசை வீரராகவும் பேட்டிங் ஆட உள்ளனர். அவர்களுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லப் போகும் வீரர்களாக இரண்டு வீரர்களை பிசிசிஐ குறித்து வைத்துள்ளது.
ஜெய்ஸ்வால் மற்றும் ரிங்கு சிங் தான் அந்த இரண்டு வீரர்கள். இடது கை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால் துவக்க வீரராக அதிரடி ஆட்டத்தால் அதிக சிக்ஸ் அடித்து அணியின் ஸ்கோரை முதல் 10 ஓவர்களில் உயர்த்த வேண்டும் என்பதே அவருக்கான திட்டம்.
ரிங்கு சிங்கைப் பொறுத்தவரை விக்கெட்டை இழக்காமல், அதிரடியாக ரன் குவித்து போட்டியை முடித்து வைப்பதில் அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடைசி 10 ஓவர்கள் அவர் அந்த பணியை தொடர வேண்டும். அவரும் எளிதாக சிக்ஸ் அடிக்கக் கூடியவர் என்பதால் அவரை பிசிசிஐ அதிகம் நம்புகிறது. இந்த இரண்டு சிக்ஸர் மெஷின்களை வைத்து இந்தியா 2024 டி20 உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசையும் கூட.