சென்னை : 3 ஐசிசி தொடர்களில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், இந்திய அணிக்காக முக்கிய போட்டிகளில் இதுவரை குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணியின் மைக் ஹசியை போல் 29 வயதிற்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் இடம்பிடித்தவர் சூர்யகுமார் யாதவ். ஐபிஎல் தொடரில் பிளாட் பிட்ச்களில் படுத்துக்கொண்ட சிக்ஸ் அடிக்கும் சூர்யகுமார் யாதவ், கொஞ்சம் ஸ்பின்னர்களுக்கோ அல்லது வேகப்பந்துவீச்சாளர்களுக்கோ பிட்சில் உதவி கிடைத்தால் களத்திலேயே கதகளி ஆடிவிடுவார்.

இதுவரை இந்திய அணிக்காக 3 ஐசிசி தொடர்களில் விளையாடி இருக்கிறார். 2021ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் 42 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். அதன்பின் 2022ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் 40 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்தார்.
மற்றபடி கத்துக்குட்டி அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் பொளந்து கட்டினார். ஆனால் முக்கியமான இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 14 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் 239 ரன்களை விளாசினார். அதேபோல் கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் குல்தீப் யாதவிற்கு ஸ்ட்ரைக் கொடுத்தது இன்றுவரை விமர்சிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவில் பிளாட் பிட்ச்களாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் கட்டர்ஸ் வீசும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும், ஸ்பின்னர்களுக்கு உதவி கிடைக்கும். இதனால் மிடில் ஆர்டரில் களமிறங்கும் சூர்யகுமார் யாதவின் பேட்டிங் ஃபார்ம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
பிளாட் பிட்ச்களில் சூர்யகுமார் யாதவ் அசத்துவார் என்றாலும், நட்சத்திர அணிகளுக்கு எதிராக கடினமான பிட்ச்களில் எப்படி விளையாட போகிறார் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது. இவரை விடவும் ரிஷப் பண்ட் அந்த இடத்தில் விளையாட பொறுத்தமானவர் என்பதால் ரோகித் சர்மா - ராகுல் டிராவிட் கூட்டணி இவர்களை எப்படி பயன்படுத்த உள்ளது என்பதும் எதிர்பார்க்கப்படுகிறது.