மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பம் அளிக்க வேண்டிய கடைசி தேதி நெருங்கியும் இதுவரை ஒருவர் கூட அந்தப் பதவிக்கான விண்ணப்பத்தை அளிக்கவில்லை என கூறப்படுகிறது. கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரை பிசிசிஐ அணுகியும், அவர்கள் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியே வேண்டாம் என தலை தெறிக்க ஓடி விட்டனர்.
2024 டி20 உலகக் கோப்பை தொடருடன் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைகிறது. அவர் மீண்டும் இந்திய அணியுடன் பயணிக்க விரும்பவில்லை. இதை அடுத்து அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான விண்ணப்பத்தை தகுதியுள்ள நபர்கள் அளிக்கலாம் என பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான கடைசி தேதி மே 27 ஆகும்.

உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்ட முன்னணி கிரிக்கெட் தனியாக விளங்கும் இந்திய அணிக்கு தகுதியான, அனுபவம் கொண்ட, நட்சத்திர வீரர்களை திறம்பட கையாளும் ஆற்றல் கொண்ட ஒரு பயிற்சியாளர் வேண்டும் என்பதால் பிசிசிஐ திரை மறைவில் சிறந்த பயிற்சியாளர்கள் சிலரை அணுகி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் அவர்களில் ஒருவர் கூட பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பவில்லை.
மேலும், ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான பயிற்சியாளர்களாக விளங்கும் சிலர் தாங்களும் விண்ணப்பிக்கப் போவதில்லை என வெளிப்படையாகவே அறிவித்துள்ளனர். பிசிசிஐ அணுகிய சிலரில் முக்கியமானவர்கள் - ஸ்டீபன் பிளம்மிங் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆவர். அவர்கள் இருவரும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க போவதில்லை என கூறிவிட்டனர்.
அடுத்து ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆன்டி பிளவர் மற்றும் லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ஆகியோரும் விண்ணப்பிக்கப் போவதில்லை என கூறிவிட்டனர். இந்த பட்டியலில் தற்போது மிச்சம் இருப்பது கவுதம் கம்பீர் மட்டுமே. அவர் ஆக்ரோஷமான மனிதர் என்பதால் அவரை கையாள்வது பிசிசிஐ-க்கும் பின்னாளில் தலைவலியாக மாறலாம் என்பதால் அவரை தலைமை பயிற்சியாளராக நியமிப்பதில் இரு வேறு கருத்துக்கள் உள்ளன.
இந்த நிலையில் இந்திய அணிக்கு தலைமை பேச்சாளராக வர ஏன் யாருமே ஒப்புக்கொள்ளவில்லை? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது, அரசியல் தான். இந்திய அளவில் திறமையான கிரிக்கெட் வீரர்கள் என கணக்கிட்டால் சுமார் 25 முதல் 30 வீரர்கள் வரை இருப்பார்கள். ஆனால் அவர்களில் 15 வீரர்களை மட்டுமே ஒரு தொடருக்கு தேர்வு செய்து அழைத்துச் செல்ல முடியும். அவர்களிலும் 11 பேரை மட்டுமே ஒரு போட்டியில் விளையாட வைக்க முடியும். ஆனால், யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கவில்லையோ அதை சுட்டிக்காட்டி ரசிகர்கள் மிகக் கடுமையாக விமர்சிப்பார்கள்.
ஒவ்வொரு போட்டியின் தோல்விக்கும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அது மட்டுமின்றி பிசிசிஐ அளவிலும், தேர்வுக் குழு அளவிலும் வீரர்கள் தேர்வில் நிறைய அரசியல் இருக்கும். சிலரை அணியில் ஆட வைக்க வேண்டும், சிலரே ஆட வைக்கக் கூடாது என நிறைய அழுத்தங்கள் இருக்கும்.
மேலும், ஒரு ஆண்டில் பத்து மாதங்களும் இந்திய அணி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. எனவே, ஐபிஎல் தொடர் நடக்கும் இரண்டு மாதங்கள் மட்டுமே தலைமை பயிற்சியாளருக்கு ஓய்வு கிடைக்கும். இது போன்ற விஷயங்களை எல்லாம் கருத்தில் கொண்டு தான் யாரும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக வர ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.