மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் இருந்து வெளியேறி இருப்பது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல்ஹக் தற்போதுள்ள பாகிஸ்தான் அணியில் பல பிரச்சனைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கடந்த மூன்று உலகக் கோப்பையை பாருங்கள் பாகிஸ்தான் அணியில் நடு வரிசையில் சரியான வீரர்கள் யாருமே இல்லை. பேட்டிங் வரிசையில் நம்பர் 4, 5, 6 வது இடத்தில் யார் விளையாடுவார்கள்.

பெரும்பான்மையான வீரர்கள் முதல் மூன்று இடங்களில் தான் விளையாடுகிறார்கள். இதனால் நடு வரிசையில் விளையாடுவதற்கு ஆளே கிடையாது. நடுவரிசையில் இப்திகார் மற்றும் அசாம் கான் ஆகியோர் தான் இருக்கிறார்கள். நடப்பு உலக கோப்பையில் இருவரும் சரியாக விளையாடுவதில்லை. இதற்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.
ஏன் அடித்தட்டில் இருந்து எந்த வீரரும் தற்போது வருவதில்லை. உங்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து வீரர்கள் தேவை. ஆனால் ஏன் அதற்கான பணிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மேற்கொள்வதில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் தற்போது நிலையற்ற தன்மையில் இருக்கின்றது. எனினும் சில கிரிக்கெட் போட்டிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட்டில் பல்வேறு அணிகளும் பயிற்சியாளரும் இருக்கிறார்கள். அவர்களால் ஏன் திறமை வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்க முடிவதில்லை. சுழற் பந்துவீச்சாளர்களை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள்.
லெக் ஸ்பின் வீசக்கூடிய வீரர்கள் யாருமே கிடையாது. பேட்ஸ்மேனுக்கு நெருக்கடியை கொடுக்கும் சுழற் பந்துவீச்சாளர்களில் அப்ரார் மட்டும்தான் இருக்கின்றார்.அவரை தவிர வேறு எந்த சுழற் பந்துவீச்சாளரும் இருப்பது போல் தெரியவில்லை. கடந்த மூன்று டி20 உலக கோப்பை தொடரில் ஒரே மாதிரியான வீரர்கள் தான் தொடர்ந்து இடம்பெறுகிறார்கள். இதில் எந்த மாற்றமும் நடைபெறுவதில்லை. சரியான அணியை தேர்வு குழுவினர் தேர்வு செய்வதில்லை என்று மிஸ்பா உல் ஹக் கூறினார்.