மும்பை : டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படாத நிலையில், ஐபிஎல் தொடரை கேப்டனாக வென்ற உற்சாகத்தில் இருக்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர். தற்போது இந்திய அணியின் கதவுகள் திறக்கப்படவுள்ள நிலையில், வீழ்த்த முடியாதவர்கள் என்று உலகில் யாருமில்லை என்று ஸ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்து ஒழுங்கீன நடவடிக்கைக்காக கழற்றிவிடப்பட்டவர் ஸ்ரேயாஸ் ஐயர். அப்போது ரஞ்சி டிராபி விளையாடவில்லை, காயம் என்று பொய் சொல்கிறார் என்று பல்வேறு புகார்கள் எழுந்தன. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்காக விளையாடி ரஞ்சி டிராபி கோப்பையை வென்றார்.

அதேபோல் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படவில்லை. இந்த சூழலில் கேகேஆர் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தார். இந்த வெற்றிக்கு பின், உலகக்கோப்பை தொடருக்கு பின்னான காயம் குறித்து நான் கூறிய போதும் யாரும் கேட்கவில்லை என்று வெளிப்படையாக பதிலடி கொடுத்தார்.
தற்போது இலங்கை அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டால், ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக கம்பேக் கொடுக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்படவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், கேகேஆர் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இதனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கான முக்கியத்துவமும் இந்திய அணியில் அதிகரிக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், அழுத்தத்தில் களமிறங்கும் ஒவ்வொரு நொடியையும் வாய்ப்பாகவே பார்க்கிறேன். எனது வயிற்றில் எப்படி வண்ணத்துப்பூச்சிகள் பறப்பது போல் பிரஷரை உணர்கிறேனோ, அதேபோல் எதிரணி வீரர்களும் உணர்வார்கள். இந்த உலகில் வீழ்த்த முடியாதவர்கள் என்று யாருமே கிடையாது. தொடர்ச்சியாக முழு உழைப்பை கொடுக்கும் போது, எதுவும் சாத்தியமாகும்.
அதனை தான் எனக்கும் சொல்லிக் கொள்கிறேன். சவால்கள் மட்டுமே நம்மை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்து செல்லும். தற்போது நானும் சவாலாக சூழலில் தான் இருக்கிறேன். அனைத்து கதவுகளும் மூடப்படும் போது, வெளிச்சத்தை தேடி ஓடும் பயணம் சுவாரஸ்யமானது என்று தெரிவித்துள்ளார்.