ஒரு தமிழ்நாட்டு வீரர் கூட இல்லாத உலகக்கோப்பை வெற்றி.. இதற்கு முன் கோப்பை வென்ற தமிழக வீரர்கள் யார்?
மும்பை: 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது அனைத்து இந்திய ரசிகர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டிலும் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் இந்திய அணி உலகக் கோப்பை வென்றதை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அதே வேளையில் இந்த முறை உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறாதது சிறிய வருத்தத்தை அளித்துள்ளது.
1983 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை. 2007 டி20 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என நான்கு ஐசிசி தொடர்களில் கோப்பை வென்ற இந்திய அணியில் தமிழக வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். ஆனால் முதன் முறையாக தமிழக வீரர் இல்லாத ஒரு இந்திய அணி உலகக் கோப்பையை வென்று இருக்கிறது.

1983 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இடம்பெற்று இருந்தார். அப்போது அவர் துவக்க வீரராக விளையாடினார். அடுத்து 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இடம் பெற்று இருந்தார். அவர் நான்கு போட்டிகளில் விளையாடினார்.
அதன் பின் 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார். அவர் இரண்டு போட்டிகளில் விளையாடினார். அது மட்டும் இன்றி அந்த உலகக் கோப்பைக்கான அணியைத் தேர்வு செய்தது கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தலைமையிலான தேர்வுக் குழு என்பதும் குறிப்பிடத்தக்கது.
அடுத்து 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது மூன்று தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம் பெற்று இருந்தனர். ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக் மற்றும் முரளி விஜய் என மூன்று வீரர்கள் அதில் இடம் பெற்று இருந்தனர். அவர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் அனைத்து போட்டிகளிலும் விளையாடினர்.
ஆனால், 2024 டி20 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம் பெறவில்லை என்பது தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு சிறிய குறையாகவே உள்ளது. அதற்கு முக்கிய காரணம் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக்குக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெறும் அளவுக்கு எந்த வீரரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இடையே தமிழக வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் சில டி20 போட்டிகள், ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஆடினார். அதன் பின் அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
தற்போது தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் பேட்டிங்கிலும், சாய் கிஷோர் பவுலிங்கிலும் இந்திய டி20 அணியில் இடம் பெறும் முயற்சியில் இருக்கின்றனர். அவர்கள் சில போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடி உள்ளனர். ஆனால், உலகக்கோப்பைக்கான டி20 அணியில் மற்ற வீரர்களுடன் போட்டி போட்டு வாய்ப்பு பெற முடியவில்லை. அடுத்து நடைபெற உள்ள ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் சாய் சுதர்ஷன் மாற்று வீரராக இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் காலங்களிலாவது தமிழக வீரர்கள் உலகக் கோப்பை வெல்லும் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்பதே நமது ஆசை.


Click it and Unblock the Notifications