மிஸ்டரி ஸ்பின்னரை உலகக்கோப்பைக்கு செலக்ட் பண்ணலை.. டீ போடத் தான் கூட்டிட்டு போயிருக்காங்க!
கராச்சி: 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்ற இளம் மிஸ்டரி ஸ்பின்னர் ஆன அப்ரார் அகமது ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. அவரை போட்டிகளில் ஆடை வைக்காதது முன்பு விமர்சிக்கப்பட்டது. தற்போது அப்ரார் அகமது உலகக்கோப்பை தொடரின் போது மற்ற வீரர்களுக்கு தேநீர் தயாரித்துக் கொடுக்கும் வேலையை மட்டுமே செய்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறி இருந்தது. அந்த அணியின் மோசமான செயல்பாட்டால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. குறிப்பாக கேப்டன் பாபர் அசாம் தனது நட்பு வட்டத்தில் இருக்கும் வீரர்களுக்கு மட்டுமே அணியில் இடம் கொடுத்து வருகிறார் என்ற விமர்சனம் எழுந்தது. அதில் முக்கியமான ஒருவர் சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டரான ஷதாப் கான்.

அவர் கடந்த ஓராண்டில் எந்த வகையிலும் பாகிஸ்தான் அணிக்கு எந்த ஒரு போட்டியையும் வென்று கொடுக்கவில்லை. இந்த நிலையில் அவரை ஏன் இன்னும் அணியில் வைத்திருக்க வேண்டும்? என முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவரது சுழற் பந்துவீச்சால் பாகிஸ்தான் அணிக்கு எந்த உதவியும் இல்லை என்ற நிலையில் மற்ற நல்ல சுழற் பந்துவீச்சாளர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. அவர்களில் ஒருவர்தான் அப்ரார் அகமது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் அப்ரார் அகமது சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். மிஸ்டரி ஸ்பின்னர் என்ற முறையில் அவரது சுழற் பந்துவீச்சை பேட்ஸ்மேன்கள் சந்திக்க திணறி வந்தனர். அப்படி ஒரு சுழற் பந்துவீச்சாளரை உலகக் கோப்பையில் பயன்படுத்தியிருந்தால் அது நிச்சயம் எதிரணி பேட்ஸ்மன்களுக்கு அழுத்தத்தை கொடுத்திருக்கும். ஆனால், அவரை ஏன் உலகக் கோப்பையில் ஒரு போட்டியில் கூட பயன்படுத்தவில்லை? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த பத்திரிக்கையாளர் அப்துல் மஜீத் பாட்டி என்பவர், 25 வயதான அப்ரார் அகமது பாகிஸ்தான் அணியில் சக வீரர்களுக்கு தேநீர் தயாரித்துக் கொடுக்கும் வேலையை தான் இந்த தொடர் முழுவதும் செய்தார் எனக் கூறியிருக்கிறார். எப்போதெல்லாம் வீரர்களின் அறையில் அதிக பேர் இருக்கிறார்களோ, அப்போது அப்ரார் அகமதை அழைத்து தேநீர் தயாரிக்குமாறு மூத்த வீரர்கள் கூறியிருக்கின்றனர். அவர் தயாரிக்கும் தேநீர் சுவையாக இருக்கும் என்பதால் அவர்கள் அவரை அதற்கு மட்டுமே பயன்படுத்தி வந்ததாக அப்துல் மஜீத் கூறியிருக்கிறார். இந்த தகவல் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மீண்டும் அனலை கிளப்பி இருக்கிறது. ஒரு இளம் வீரருக்கு வாய்ப்பும் கொடுக்காமல் அடிமையை போல பயன்படுத்துவதா? என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications