டி20 கிரிக்கெட்டிலேயே பிரம்மாண்ட சாதனை.. ரோஹித், கோலியை ஓரங்கட்டிய அயர்லாந்து வீரர்
துபாய் : டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகப் பெரும் மைல்கல் சாதனை படைத்து இருக்கிறார் அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங். ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரை பின்தள்ளி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ஃபோர் அடித்துள்ள அவர், தற்போது புதிய மைல்கல் சாதனை ஒன்றையும் படைத்து இருக்கிறார்.
அயர்லாந்து அணி, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பால் ஸ்டிர்லிங் 25 ரன்கள் எடுத்தார். அப்போது அவர் சர்வதேச டி20 போட்டிகளில் 400 ஃபோர் என்ற மைல்கல்லை தாண்டினார்.

தற்போது பால் ஸ்டிர்லிங்க் 135 போட்டிகளில் 401 ஃபோர் அடித்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ஃபோர் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அதே பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் ஆசாம் 395 ஃபோர் அடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். இந்திய அணியின் விராட் கோலி 361 ஃபோர், ரோஹித் சர்மா 359 ஃபோர் அடித்து மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர்.
ஃபோர் அடிப்பதில் பால் ஸ்டிர்லிங் முதல் இடத்தில் இருந்தாலும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. அவர் 190 அடித்து முதல் இடத்தில் இருக்கிறார்.
அந்தப் பட்டியலில் 124 சிக்ஸ் அடித்து ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். அவர் இன்னும் நான்கு சிக்ஸ் அடித்தால் இரண்டாம் இடத்தை பிடிக்க முடியும். எனினும், ஆறாம் இடத்தில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் ஐந்து சிக்ஸ் அடித்தால் இரண்டாம் இடத்தை பிடிப்பார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 149 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 111 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அயர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2024 டி20 உலகக்கோப்பைக்கு முன்னோட்டமாக இந்த இரண்டு அணிகளும் டி20 தொடரில் ஆடி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications