நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இதுவரை ஐந்து போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதன் முடிவில் நான்கு குரூப்-களில் இடம் பெற்று இருக்கும் இருபது அணிகளும் எந்த இடங்களில் உள்ளன என்பது குறித்து பார்க்கலாம்.
இந்த உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றில் நான்கு குரூப்-கள் இடம் பெற்றுள்ளன. இந்த நான்கு குரூப்-களிலும் தலா ஐந்து அணிகள் உள்ளன. ஒவ்வொரு குரூப்பிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ள குரூப் ஏ வில் இதுவரை ஒரு போட்டி மட்டுமே நடந்துள்ளது. அதில் அமெரிக்கா மற்றும் கனடா அணிகள் மோதின. அதில் கனடா அணி தோல்வி அடைந்தது. அமெரிக்கா வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இந்தியா இதுவரை எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை.
அடுத்து குரூப் பி யில் நமீபியா - ஓமன் அணிகள் மோதிய போட்டி மட்டுமே நடைபெற்றது. அதில் நமீபியா வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.
குரூப் சி யில் இரண்டு போட்டிகள் நடந்துள்ளன. ஆப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகள் மோதிய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோதிய போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றன. இதில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டு புள்ளிகளுடன் 6.25 நெட் ரன் ரேட் பெற்று முதல் இடத்தில் உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியும் இரண்டு புள்ளிகள் பெற்று இருந்தாலும் 0.41 என்ற நெட் ரன் ரேட் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
குரூப் டி -யில் இதுவரை ஒரு போட்டி மட்டும் நடந்துள்ளது. அதில் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதின. அதில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்று இரண்டு புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.