நியூயார்க் : 2024 டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்று இருக்கும் மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜா, இந்திய அணிக்கு சாதகமாக இருப்பாரா? பாதகமாக இருப்பாரா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.
ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா உலகின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் மற்றும் சிறந்த ஆல் - ரவுண்டர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், டி20 போட்டிகளில் அவரது செயல்பாடு இதுவரை சராசரியாகவே உள்ளது. சில போட்டிகளில் அசாதாரணமான பேட்டிங் திறமையை வெளிப்படுத்துவார். ஆனால், பல போட்டிகளில் அணியின் வெற்றிக்கு எந்த ஸ்ட்ரைக் ரேட்டில் வேகமாக ரன் சேர்க்க வேண்டுமோ அதை செய்ய முடியாமல் திணறுவார். இது போன்ற சில விமர்சனங்கள் அவர் மீது உள்ளது.

சர்வதேச டி20 போட்டிகளில் அவர் 64 இன்னிங்ஸ்களில் 53 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஒரு ஓவருக்கு சராசரியாக 7.10 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். ஒட்டுமொத்த டி20 போட்டிகளை கணக்கில் கொண்டு பார்த்தால் 293 இன்னிங்ஸ்களில் 224 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். சராசரியாக ஒரு ஓவருக்கு 7.6 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். இதன் மூலம் டி20 பந்து வீச்சில் அவர் சராசரியாகவே செயல்பட்டு இருக்கிறார் என்பது தெரிகிறது.
இந்த நிலையில் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஆல் - ரவுண்டராக ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். பேட்டிங் வரிசையில் ஏழாவது இடம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது ஸ்ட்ரைக் ரேட் தான் பலருக்கும் பயத்தை அளிப்பதாக உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த 2024 ஐபிஎல் தொடரில் சில போட்டிகளில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 180க்கும் அதிகமாக இருந்தது. ஆனால், பல போட்டிகளில் அது 120 ஆகவும் இருந்தது. அவரது ஸ்ட்ரைக் ரேட் சராசரியாக 145 ஆக இருந்தது. அது நல்ல ஸ்ட்ரைக் ரேட் தான் என்றாலும் தேவையான நேரத்தில் அவர் அதிரடியாக விளையாடுவாரா? என்ற சந்தேகம் உள்ளது.
குறிப்பாக சேஸிங் செய்யும் போது அழுத்தமான சூழ்நிலைகளில் அவரால் அதிரடியாக பேட்டிங் செய்ய முடியவில்லை. இந்த நிலையில் அவரை ஒரு முழு நேர பேட்ஸ்மேனாக கருத முடியாது. எனினும், இந்திய அணியில் இடம் பெற்றுள்ள பந்து வீச்சாளர்களில் அதிக அனுபவம் கொண்டவர் ரவீந்திர ஜடேஜா மட்டுமே. அந்த வகையில் அவர் அணிக்கு கை கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல ஃபீல்டிங்கில் அவர் கில்லியாக செயல்படுவார் என்பதால் அதுவும் இந்திய அணிக்கு சாதகமான அம்சமாகும்.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை தொடரில் பிட்ச்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என கூறப்படும் நிலையில் அதை ஜடேஜா பயன்படுத்திக் கொண்டாலே அவரால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.