இந்த இந்திய வீரரால் இனி கிரிக்கெட்டே ஆட முடியாது என்று பயந்து போனேன்.. ரிக்கி பாண்டிங் ஓபன் டாக்
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் இனி கிரிக்கெட் விளையாடவே மாட்டார் என தான் நினைத்ததாகவும், அதை மீறி அவர் போராடி தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி, பின் இந்திய அணியிலும் இடம் பெற்று இருக்கிறார் எனக் குறிப்பிட்டு இருக்கிறார் ரிக்கி பாண்டிங்.
கடந்த 2022 ஆம் ஆண்டின் இறுதியில் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். மிக மோசமான அந்த விபத்தால் அவரால் நடக்க முடியாத நிலை இருந்தது. மனதளவிலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருந்தார். இந்த நிலையில் 2023 ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட்டால் பங்கேற்க முடியவில்லை. அப்போது அவரது ஐபிஎல் அணியான டெல்லி கேபிடல்ஸ்-இன் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அவரை நேரில் சென்று சந்தித்ததாகவும், அப்போது அவர் இருந்த நிலையில் அவரால் இனி கிரிக்கெட் விளையாடவே முடியாது என்று தான் அஞ்சியதாகவும் கூறி இருக்கிறார்.

இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசுகையில், "கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போது, நான் ரிஷப் பண்ட்டுடன் இரண்டு மாதங்களை செலவிட்டேன். அப்போது அவருக்கு விபத்து ஏற்பட்டு மூன்று அல்லது நான்கு மாதங்கள் தான் ஆகி இருந்தது. அப்போது அவரை நான் பார்த்த போது இனி அவரால் கிரிக்கெட் விளையாடவே முடியாதோ? என்று எனக்கு பெரும் அச்சம் ஏற்பட்டது. அவர் மனதளவில் மட்டுமின்றி, உடலளவிலும் மோசமான காயங்களை அடைந்திருந்தார். அப்போது அவர் இருந்த நிலையில் அவரால் நடக்கக் கூட முடியவில்லை." என்றார்,
மேலும், "பின்னர் அவர் ஊன்றுகோலின் உதவியுடன் நடந்தார். அப்போது நான் அவரிடம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டேன். அவர் என்னைப் பார்த்து, "நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் தயாராகி விடுவேன்." என்றார். அதன் பின் அவர் தன்னைத்தானே சிறப்பாக பார்த்துக் கொண்டு தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடும் அளவுக்கு தயாரானார். டெல்லி கேபிடல்ஸ் அணி அவரை மிகச் சிறப்பாக பார்த்துக் கொண்டது. பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபர்ஹார்ட் அவரை தேற்றுவதில் மிகச் சிறப்பாக பணியாற்றினார்." இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறி இருக்கிறார்.
ரிஷப் பண்ட் தற்போது 2024 டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம் பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications