நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படவில்லை. அது குறித்து அணித் தேர்வின் போதே கடும் விமர்சனம் எழுந்தது. அவரை மாற்று வீரராக மட்டுமே பிசிசிஐ தேர்வு செய்தது. முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட 15 வீரர்களில் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை.
அவருடைய இடத்தை ஆல் - ரவுண்டரான சிவம் துபே பிடித்தார். அவர் அதிரடியாக பேட்டிங் செய்வதோடு வேகப்பந்துவீச்சாளராகவும் சில ஓவர்கள் வீசி அணிக்கு கை கொடுப்பார் என்பதால் அவரை அணியில் தேர்வு செய்தது பிசிசிஐ. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அவர் மிடில் ஓவர்களில் அதிரடியாக ரன் குவித்து இருந்தார். அதன் காரணமாகவே ரிங்கு சிங்கை ஒதுக்கி விட்டு அவருக்கு வாய்ப்பு அளித்தது பிசிசிஐ.

இந்த நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் பயிற்சி போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக சிவம் துபே மோசமாக பேட்டிங் ஆடினார். அவர் 16 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரால் பந்துகளை சரியாக டைமிங் செய்து அடிக்க முடியவில்லை. டெஸ்ட் போட்டி போல நிறைய டாட் பால்கள் ஆடினார். அவரின் ஆட்டம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
இந்தப் போட்டியில் இந்தியா 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போதும், சிவம் துபே மீது கடும் விமர்சனம் எழுந்தது. பலரும் ரிங்கு சிங்கின் இடத்தை சிவம் துபே அநியாயமாக அபகரித்து விட்டார் என்றும், பிசிசிஐ ரிங்கு சிங்கின் முதுகில் குத்தி விட்டதாகவும், துபேவை நீக்கி விட்டு, ரிங்கு சிங்கை உடனடியாக அணியில் சேர்க்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். உலகக் கோப்பை தொடரின் இடையே அணியில் மாற்றம் செய்வது எளிது அல்ல. ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால் மட்டுமே அவரை நீக்கி விட்டு மாற்று வீரர் ஒருவரை அணியில் சேர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் சிவம் துபே பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டார். அவர் 3 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார். அந்த வகையில் சிவம் துபே நம்பிக்கை அளித்து இருக்கிறார். எனவே,குரூப் சுற்றில் அவர் மீண்டும் தனது பேட்டிங் ஃபார்மை மீட்க வாய்ப்பு உள்ளது.