மும்பை : இந்திய அணி 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகி வரும் நிலையில் அணியில் யாரை விக்கெட் கீப்பராக ஆட வைக்கலாம் என்ற கேள்விக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை.
இந்திய அணியில் தற்போது ஜிதேஷ் சர்மா விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். எனினும், இஷான் கிஷன், கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கும் அணியில் விக்கெட் கீப்பராக இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஐபிஎல் தொடரில் அவர்களின் செயல்பாட்டை வைத்தே யார் விக்கெட் கீப்பர் என்பது முடிவு செய்யப்படும்.

இந்த நிலையில், ரிஷப் பண்ட் ஒரு காலில் மட்டும் தகுதி பெற்று பேட்டிங் ஆடும் நிலைக்கு வந்தாலும் அவரை அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி இருக்கிறார். அவர் ஒரு கேம் சேஞ்சர் என்பதால் கே எல் ராகுலை விட அவருக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர் கூறி இருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது.
ரிஷப் பண்ட் தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டு இருக்கிறார். அவரது கால்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதால் அவர் அதற்கு பின் முழு உடற்தகுதி பெற கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவர் 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்றால் அவர் 2024 டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், அனுபவம் மிக்க பேட்ஸ்மேனான கே எல் ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்தலாம் என சிலர் கூறி வரும் நிலையில், ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற சுனில் கவாஸ்கர், "ராகுல் பேட்ஸ்மேன் மட்டுமல்ல ஒரு விக்கெட் கீப்பரும் தான். ஆனால், ரிஷப் பண்ட் ஒரு காலை மட்டும் சரி செய்து கொண்டு வந்து ஆடினாலும் கூட அவரைத் தான் அணியில் சேர்க்க வேண்டும். அவர் எந்த விதமான போட்டிகளில் ஆடினாலும் போட்டியை மற்றும் திறன் கொண்டவர். நான் தேர்வுக் குழுவில் இருந்தால் நான் அவர் பெயரைத் தான் முதலில் எழுதுவேன்" எனக் கூறி இருக்கிறார்.