ரோஹித், கோலி ஓய்வு.. இளம் வீரர்களுக்கு வழிவிட முடிவு.. இந்திய டி20 அணியில் அதிரடி மாற்றம்
மும்பை : இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2024 டி20 உலகக்கோப்பை தொடர் தான் அவர்கள் கடைசியாக ஆடும் டி20 தொடராக இருக்கும் என கூறப்படுகிறது.
2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அந்த அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் விராட் கோலி பெயரும் இடம் பெற்று இருந்தது.

ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர்களாக உள்ளனர். அவர்கள் இருவரும் இதுவரை டி20 உலகக்கோப்பை வெல்லவில்லை, ரோஹித் சர்மா 2007 டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் இடம் பெற்று இருந்தாலும் இறுதிப் போட்டியில் பிளேயிங் லெவனில் அவர் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் கடைசி முயற்சியாக டி20 உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்திய டி20 அணியில் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. 2024 டி20 உலகக்கோப்பை தொடரின் முடிவில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வை அறிவிக்கக் கூடும் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி உலகின் மிகச் சிறந்த டி20 பேட்ஸ்மேன்கள் ஆவர். டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 117 போட்டிகளில், 109 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 37 அரைசதங்களுடன் 51.75 பேட்டிங் சராசரி மற்றும் 138 க்கு மேல் ஸ்ட்ரைக் ரேட்டில் 4,037 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 122* ஆகும்.
ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். 143 இன்னிங்ஸ்களில் 3,974 ரன்களையும், ஸ்ட்ரைக் ரேட் ஏறக்குறைய 140 ஆகவும், 31க்கு மேல் பேட்டிங் சராசரியும் வைத்துள்ளார் ரோஹித் சர்மா. அவரது சிறந்த ஸ்கோர் 121* ஆகும். அவர் ஐந்து சதங்களும், 29 அரைசதங்களும் அடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications