மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தங்களுடைய பயணத்தை புதன் கிழமை ஐந்தாம் தேதி முதல் தொடங்குகிறது. குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.
கத்துக்குட்டி அணியாக அயர்லாந்து கருதப்பட்டாலும் அவர்கள் அண்மையில் பாகிஸ்தானையே வீழ்த்திய தெம்புடன் இருக்கிறார்கள். இதனால் அயர்லாந்து அணியை குறைத்து மதிப்பிட முடியாது.

இந்த நிலையில் இந்த போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக ஒரு மிகப்பெரிய சாதனையை எதிர்நோக்கி இருக்கிறார். தற்போது ரோகித் சர்மா 54 சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து 41 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் வெற்றிகரமான இந்திய கேப்டன் என்ற தோனியின் சாதனையை ரோகித் சர்மா தற்போது சமன் செய்துள்ளார்.
இந்த நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் தோனியின் சாதனையை முறியடித்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெற்றிகரமான இந்திய அணி கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா பெறுவார்.இந்திய அணியின் டி20 கேப்டனாக ரோகித் சர்மா 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவி ஏற்றார்.
ரோகித் சர்மா 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்திய அணி இறுதி வரை அழைத்து சென்றார். தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா ரோகித் சர்மா தலைமையில் மீண்டும் டி20 உலக கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒரு சதம் அடித்தவுடன் அமைதியாகிவிட்டார். இதனால் ரோகித் சர்மா தன்னுடைய அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.