மும்பை : டி20 உலகக்கோப்பை தொடரில் தேர்வு செய்யப்படாத ரிங்கு சிங்கை சந்தித்து ரோகித் சர்மா ஆறுதல் கூறிய சம்பவம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
ஐபிஎல் தொடரில் 5 சிக்சர்களை விளாசிய பின் இளம் வீரர் ரிங்கு சிங்கின் கிரிக்கெட் பயணம் உச்சத்திற்கு சென்றது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்திய அணியின் ஃபினிஷராக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அயர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் என்று அத்தனை நட்சத்திர அணிகளுக்கு எதிராகவும் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இதனால் டி20 உலகக்கோப்பை தொடரில் ரிங்கு சிங்கின் பெயர் நிச்சயம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹர்திக் பாண்டியாவின் வரவு காரணமாக டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படவில்லை. இது ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது.
அதேபோல் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த ரிங்கு சிங்கும் ஏமாற்றமடைந்தார். அவரது குடும்பத்தினர் பட்டாசு வெடித்து கொண்டாட தயாராக இருந்த போது, தாயிடம் ஃபோன் செய்து ஏமாற்றத்தை ரிங்கு சிங் வெளிப்படுத்தியது தெரிய வந்தது.
இந்த நிலையில் ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாதது குறித்து அஜித் அகர்கர் பேசுகையில், ரிங்கு சிங் எந்த தவறும் செய்யவில்லை. கடைசி வரை ரிங்கு சிங்கை அணியில் சேர்க்க முயற்சித்தோம். ஆனால் இந்திய அணியின் காம்பினேஷனை மனதில் வைத்து ரிசர்வ் வீரர்களுக்கான பட்டியலில் சேர்த்தோம் என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
மும்பையில் நடந்த இந்த செய்தியாளர்கள் சந்திப்பிற்கு பின் கேப்டன் ரோகித் சர்மா, வான்கடே மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த ரிங்கு சிங்கிடம் சில மணி நேரம் செலவிட்டார். டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாததால் சோகத்தில் இருந்த ரிங்கு சிங்கிற்கு ரோகித் சர்மா நேரிலேயே ஆறுதல் கூறியதாக தெரிகிறது. இதனால் கேப்டனாக ரோகித் சர்மா உயர்ந்த இடத்தை எட்டியுள்ளதாக அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.