மும்பை : இந்திய டி20 அணியின் கேப்டன் பதவி விரைவில் ஹர்திக் பாண்டியா வசம் செல்லப் போகிறது என ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணி அடுத்து 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. அந்தத் தொடருக்கான அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
அந்த அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டார் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவை சேர்க்கக்கூடாது என முன்னாள் வீரர்கள் சிலர் கூறி வந்த நிலையில் ஹர்திக் பாண்டியா உலக கோப்பை அணியில் இடம் பெற்றதோடு மட்டுமில்லாமல், அணியின் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அதன் பின்னணி குறித்து தற்போது தெரியவந்துள்ளது. ரோஹித் சர்மா டி20 உலக கோப்பையின் முடிவில் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார் என கூறப்படுகிறது. அவர் ஓய்வு பெற்றால் அடுத்த கேப்டன் யார் என்று கேள்வி இருந்த நிலையில், பிசிசிஐ ஹர்திக் பாண்டியாவை அடுத்த கேப்டனாக தேர்வு செய்துள்ளது. அதன் காரணமாகவே 2024 ஐபிஎல் தொடரில் சரியாக செயல்படாத ஹர்திக் பாண்டியாவை உலகக் கோப்பைக்கான அணியில் சேர்த்து இருக்கிறது தேர்வு குழு.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம், ரோஹித் சர்மா உண்மையிலேயே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறாரா? அல்லது ஓய்வு பெறுமாறு ஹர்திக் பாண்டியாவால் அழுத்தக் கொடுக்கப்படுகிறதா? என்பது தான்.
ஏற்கனவே, ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கி விட்டு ஹர்திக் பாண்டியாவை நியமித்தது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம். அந்த விஷயத்திலேயே ரோஹித் சர்மா கடும் அதிருப்தியில் இருக்கிறார். தற்போது இந்திய அணியிலும் ரோஹித் சர்மாவுக்கு அழுத்தம் ஏற்பட்டு இருப்பதாகவே இதை நாம் கருத வேண்டி உள்ளது.
ரோஹித் சர்மாவுக்கு 37 வயது ஆகிவிட்ட நிலையில் அவர் இந்த உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக பேச்சு கிளம்பி உள்ளது. அது நடக்குமா? என பொறுத்திருந்து பார்க்கலாம்.