மும்பை: சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மா, டி20 போட்டிகளில் கேப்டனாக செய்துள்ள ஒரு முக்கிய சாதனையை வேறு எந்த ஒரு கேப்டனாலும் முறியடிக்க முடியாது என கூறப்படுகிறது. அது போன்ற ஒரு சாதனையை யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாது.
இந்திய டி20 அணியின் கேப்டனாகவும், ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாகவும் ரோஹித் சர்மா இதுவரை எட்டு டி20 தொடர்களின் இறுதிப் போட்டிக்கு தனது அணியை அழைத்துச் சென்று இருக்கிறார். அந்த எட்டு இறுதி போட்டிகளிலும் கேப்டனாக தனது அணிக்கு வெற்றி தேடி கொடுத்திருக்கிறார். வேறு எந்த ஒரு கேப்டனும் செய்யாத மாபெரும் சாதனை ஆகும்.

இது போன்ற சாதனையை தோனி கூட செய்ததில்லை. அவர் பலமுறை டி20 தொடர்களின் இறுதிப் போட்டியில் கேப்டனாக தோல்வியை சந்தித்து இருக்கிறார். ஆனால். டி20 தொடர்களின் இறுதிப்போட்டியில் கேப்டனாக எட்டு முறை தோல்வியை சந்திக்காமல் ரோஹித் சர்மா மாபெரும் சாதனையை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் இதுவரை ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்று இருக்கிறார் ரோஹித் சர்மா. அந்த ஐந்து முறையும் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கோப்பை வென்று இருக்கிறது.
அதேபோல சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் ஒரு முறை மும்பை இந்தியன்ஸ் அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றதோடு, கோப்பையையும் பெற்று கொடுத்தார். அடுத்து 2018 நிதாஸ் டிராபி டி20 தொடரில் இந்திய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றதோடு கேப்டனாக அந்த இறுதிப் போட்டியிலும் வெற்றி பெற்றார். அடுத்து 2024 டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார்.
ஆக மொத்தம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆறுமுறையும், இந்திய அணிக்காக இரண்டு முறையும் கேப்டனாக இறுதிப் போட்டி வரை சென்று, வெற்றியும் பெற்றுக் கொடுத்திருக்கிறார். இந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்றால் ஒரு உள்ளூர் டி20 அணி மற்றும் சர்வதேச டி20 அணியின் கேப்டனாக இருந்திருக்க வேண்டும். ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் மற்றும் சர்வதேச டி20 தொடர்களில் குறைந்தது ஒன்பது முறை கேப்டனாக செயல்பட்டு இருக்க வேண்டும். அவர் எத்தனை டி20 தொடர்களில் கேப்டனாக செயல்பட்டு இருந்தாலும் எப்போதெல்லாம் தனது அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுகிறதோ, அப்போது அணியை அதில் வெற்றி பெற வைக்க வேண்டும். இதை ஒன்பது முறை செய்ய வேண்டும்.
இடையே ஒரு இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தாலும் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிக்க முடியாது. அந்த வகையில் ரோஹித் சர்மாவின் இந்த சாதனை இன்னும் பல ஆண்டுகளுக்கு முறியடிக்கப்படாமலேயே இருக்கும்.