சென்னை : விரைவில் இந்திய அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்படுவார் எனவும், அவரது தலைமையில் 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
சம்பந்தமே இல்லாமல் இப்படி சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகத்தில் மிதப்பதற்கு காரணம் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங்கை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ விரும்புவதாக வெளியான செய்திதான். அந்த செய்தியை ஸ்டீபன் பிளெம்மிங் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஸ்டீபன் பிளெம்மிங் சிஎஸ்கே அணி மட்டுமின்றி மேலும் மூன்று டி20 அணிகளின் பயிற்சியாளராக இருக்கிறார். இந்த நான்கு அணிகளில் இருந்தும் விலகி, இந்திய அணியின் பயிற்சியாளராக வருவாரா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
அதற்குள் சிஎஸ்கே ரசிகர்கள் ஸ்டீபன் பிளெம்மிங் இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் அவர் ருதுராஜை இந்திய அணியின் கேப்டனாக ஆக்குவார் என கனவு கண்டு வருகின்றனர். அது மட்டுமின்றி ஸ்டீபன் பிளெம்மிங் பயிற்சியில் ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன்சியில் இந்திய அணி 2027 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையை வெல்லும் எனவும் தங்கள் ஆழ் மன ஆசைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஸ்டீபன் பிளெம்மிங் இந்திய அணியின் பயிற்சியாளராக வர விண்ணப்பம் அளிப்பாரா? என்பது முதல் சந்தேகம். அப்படியே அவர் வந்தாலும் இந்திய அணியில் ரோஹித் சர்மா, பும்ரா, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் போன்ற அனுபவ வீரர்களை தாண்டி, பிளேயிங் லெவனிலேயே இடம் பெறாத ருதுராஜ் கெய்க்வாட்டை எப்படி அணியின் கேப்டனாக ஆக்குவார்? என்பது இரண்டாவது கேள்வி. தற்போதைய சூழ்நிலையில் ஸ்டீபன் பிளமிங் சிஎஸ்கே அணியின் சகோதர அணிகளான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் (தென்னாப்பிரிக்கா டி20 தொடர்) மற்றும் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் (அமெரிக்க டி20 தொடர்) ஆகிய அணிகளின் பயிற்சியாளராகவும் இருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் ஹண்ட்ரட் தொடரில் இடம் பெற்றுள்ள சதர்ன் பிரேவ் என்ற அணியின் பயிற்சியாளராகவும் இருக்கிறார். இத்தனை அணிகளை விட்டுவிட்டு அவர் வருவது சந்தேகம்தான்.