புதிய வரலாறு.. ஐசிசி இறுதிப்போட்டிக்கு முதல்முறையாக தகுதிபெற்ற தென்னாப்பிரிக்கா.. ஆஃப்கான் படுதோல்வி
டிரினிடாட் : டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. 18 ஆண்டு டி20 உலகக்கோப்பை வரலாற்றில், முதல்முறையாக தென்னாப்பிரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. தென்னாப்பிரிக்கா அணி இதற்கு முன்பாக 2009 மற்றும் 2014 ஆகிய டி20 உலகக்கோப்பை தொடர்களில் அரையிறுதி சுற்றில் விளையாடி இருக்கிறது. ஆஃப்கானிஸ்தான் அணியை பொறுத்தவரை முதல்முறையாக அரையிறுதியில் விளையாடியது.

இதன்பின் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி கேப்டன் ரஷித் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணி 11.5 ஓவர்களில் வெறும் 56 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் மார்கோ யான்சன், ஷம்சி தலா 3 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் நார்கியே தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
டி20 உலகக்கோப்பை அரையிறுதி வரலாற்றில் பதிவான குறைந்தபட்ச ஸ்கோர் இதுதான். இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு டி காக் - ஹென்ரிக்ஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதன்பின் ஃபரூக்கி வீசிய 2வது ஓவரில் டி காக் 5 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் கேப்டன் மார்க்ரம் களமிறங்கினார். இதையடுத்து 3வது ஓவரை வீச நவீன் உல் ஹக் அழைக்கப்பட்டார்.
அந்த ஓவரின் 4வது பந்தில் மார்க்ரம் பேட்டில் எட்ஜாகி விக்கெட் கீப்பர் குர்பாஸ் கைகளில் விழுந்தது.ஆனால் ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் டிஆர்எஸ் எடுக்காததால், விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு பறிபோனது. இதன்பின் நிதானமாக விளையாடிய மார்க்ரம், தேவைக்கேற்ப பவுண்டரிகளை விளாசி ரன்களை சேர்க்க தொடங்கினார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 34 ரன்களாக இருந்தது.
இதன்பின் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசிய ஹென்ரிக்ஸ், பின்னர் கிடைத்த ஃபிரீ ஹிட்டில் சிக்சரை விளாசி அசத்தினார். இறுதியாக 8.5 ஓவர்களில் 60 ரன்களை எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முதல்முறையாக தகுதிபெற்று தென்னாப்பிரிக்கா சாதனை படைத்துள்ளது.


Click it and Unblock the Notifications