செயின்ட் லூசியா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.
அடுத்து சேஸிங் செய்த இங்கிலாந்து அணி 15வது ஓவரின் முடிவில் மிகவும் பின்தங்கி இருந்தது. அதன் பின் ஹாரி ப்ரூக் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆடிய அதிரடி ஆட்டத்தின் காரணமாக கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு வந்தது இங்கிலாந்து.

அப்போது சாம் கர்ரன் மறுமுனையிலும், ஹாரி ப்ரூக் ஸ்ட்ரைக்கிலும் இருந்தனர். கடைசி ஓவரின் முதல் பந்தில் ஹாரி புரூக் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின் ஜோப்ரா ஆர்ச்சர் களத்துக்கு வந்தார். அவர் இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். மூன்றாவது பந்தை சந்தித்த சாம் கர்ரன் ஒரு ஃபோர் அடித்தார்.
சாம் கர்ரன் பேட்டிங் திறன் கொண்டவர் என்பதால் நான்காவது பந்தை அவுட் ஃபீல்டில் அடித்த அவர் சிங்கிள் ரன் ஓட மறுத்து விட்டார். ஆர்ச்சர் ஒரு ரன் கிடைக்குமே என ஓடி வந்த போதும் சாம் கர்ரன் தானே ஸ்ட்ரைக்கில் நின்று கொள்வதாக அவரிடம் கூறினார். இதை அடுத்து ஆர்ச்சர் மீண்டும் மறுமுனைக்குச் சென்றார்.
அப்போது இங்கிலாந்து அணி கடைசி இரண்டு பந்துகளில் 9 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அதாவது கடைசி இரண்டு பந்துகளிலுமே சாம் கர்ரன் இரண்டு பவுண்டரி அடிக்க வேண்டிய நிலையில் இருந்தார். இந்த சூழ்நிலையில் ஒருவேளை ஜோப்ரா ஆர்ச்சர் கடைசி இரண்டு பந்துகளை எதிர் கொண்டு சிக்ஸர்கள் கூட அடித்திருக்கலாம். அவர் பேட்ஸ்மேன் இல்லை என்றாலும் பந்தை தூக்கி அடிக்கக்கூடியவர் தான்.
இருந்தபோதும் ஒரு ரன் ஓடி ஸ்ட்ரைக்கை மாற்றிக் கொள்ள மறுத்துவிட்டார் சாம் கர்ரன். இந்த நிலையில் ஐந்தாவது பந்தில் சாம் கர்ரனால் பவுண்டரி அடிக்க முடியவில்லை. ஒரு ரன் மட்டுமே ஓடினார். அப்போதே இங்கிலாந்தின் தோல்வி உறுதியானது.
கடைசி பந்தை சந்தித்த ஜோப்ரா ஆர்ச்சர் ரன் எடுக்கவில்லை. இதை அடுத்து இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. 7 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது. ஒருவேளை சாம் கர்ரன் தன் ஸ்ட்ரைக்கை ஆர்ச்சருக்கு கொடுத்து இருந்தால் இந்தப் போட்டியில் என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கலாம்.
ஆனால், இப்போது சாம் கர்ரனால் இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெற்றுத் தர முடியவில்லை. அவர் செய்தது தவறு என இங்கிலாந்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர். பொதுவாக தோனி ஃபினிஷர் என்பதால் இக்கட்டான நேரங்களில் கடைசி ஓவர்களில் தானே ஸ்ட்ரைக்கை வைத்துக் கொள்வார். அவர் தன்னால் சிக்ஸ் அடிக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவ்வாறு செய்வார். பல சமயங்களில் அது வேலை செய்துள்ளது. சில சமயங்களில் தோனியும் பவுண்டரி அடிக்க முடியாமல் அணியின் தோல்விக்கு காரணமாக இருந்திருக்கிறார். இந்த நிலையில் அதே போல சாம் கர்ரன் இப்போது செய்து, தேவையற்ற விமர்சனத்தை சந்தித்து இருக்கிறார்.