மும்பை : இந்திய அணியின் அடுத்த கேப்டனாக யார் வர வேண்டும் என்று முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்று பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக யார் வர வேண்டும் என்ற விவாதத்தை பிரபல வர்ணனையாளரான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தொடங்கி வைத்துள்ளார்.

இதுவரை ரோகித் சர்மா இல்லாத நேரங்களில் ஹர்திக் பாண்டியா, பும்ரா, கேஎல் ராகுல், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இந்திய அணியை வழிநடத்தியுள்ளனர். அதேபோல் டெஸ்ட் அணியின் துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட் கொண்டு வரப்பட்டிருந்தார். இதனால் இந்திய அணியின் அனைத்து வடிவங்களுக்குமான கேப்டனாக ஒரு வீரரை தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
ஏனென்றால் இதுவரை இந்திய கிரிக்கெட் வரலாற்றில் கேப்டன்சியை பிரிக்கும் வழக்கம் நடந்ததில்லை. விராட் கோலி - தோனி இருந்த போது கேப்டன்சி பிரித்து கொடுக்கப்பட்டிருந்தாலும், ஐசிசி தொடர்களுக்காகவே அந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் 3 வடிவங்களுக்குமான கேப்டன்சி தொடர்பாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், ரோகித் சர்மா இல்லாத போது இதுவரை 4 வீரர்கள் கேப்டனாக செயல்பட்டுள்ளனர்.
என்னை பொறுத்தவரை 3 வடிவங்களுக்குமான கேப்டனாக ஒருவரை கொண்டு வர வேண்டுமென்றால் அவருக்கு தலைமைப் பண்பு இருக்க வேண்டும். நட்சத்திர வீரரான பும்ரா இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளிலும் கடந்த ஓராண்டாக விளையாடி வருகிறார். ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்டால் சிக்கல் ஏற்படும்.
இதனால் இந்திய அணியின் கேப்டன்கள் அடுத்த ஆண்டுகளில் மாறிக் கொண்டே இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நான் பும்ராவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் ஒரேயொரு வீரரை தான் கேப்டனாக கொண்டு வர வேண்டுமென்றால், இந்திய அணியில் ஒருவர் மட்டுமே 3 வடிவங்களிலும் விளையாடி வருகிறார். அது பும்ரா தான் என்று தெரிவித்துள்ளார்.