மும்பை : 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில் அதில் கே எல் ராகுல் பெயர் இடம் பெறவில்லை. மாறாக மாற்று விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் இடம் பெற்று இருக்கிறார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் இதைக் கொண்டாடி வருகிறார்கள்.
இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற இடத்துக்கு கடும் போட்டி நிலவி வந்தது, குறிப்பாக டி20 அணியில் கே எல் ராகுல், சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா ஆகியோரிடையே இந்திய அணியில் இடம் பெற போட்டி இருந்தது. இதனிடையே காயத்தில் இருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட் 2024 ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி தன் ஃபார்மை நிரூபித்தார்.

இதை அடுத்து ரிஷப் பண்ட் இந்திய டி20 அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக இடம் பெற்றார். மாற்று விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன், கே எல் ராகுல் இடையே கடும் போட்டி இருந்தது. 2024 ஐபிஎல் தொடர் செயல்பாட்டை வைத்துப் பார்த்த போது இருவருமே அதிக ரன் குவித்து இருந்தனர். ஆனால், ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் சஞ்சு சாம்சன் முன்னிலையில் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
கே எல் ராகுல் குறிப்பிட்ட பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் மட்டும் ரன் குவித்து விட்டு தனக்கு கடினமாக இருக்கும் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் முற்றிலுமாக ரன் குவிக்காமல் ஆடி வருகிறார். இது உலகக்கோப்பை போன்ற தொடர்களில் அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவருக்கு தேர்வுக் குழு இடம் அளிக்கவில்லை.
2024 ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் 9 போட்டிகளில் 385 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 77. ஸ்ட்ரைக் ரேட் 161.
2024 ஐபிஎல் தொடரில் கே எல் ராகுல் 9 போட்டிகளில் 378 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 42. ஸ்ட்ரைக் ரேட் 144.
சஞ்சு சாம்சன் மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மட்டுமின்றி டாப் ஆர்டரில் எந்த வீரருக்காவது காயம் ஏற்பட்டால் அந்த இடத்திலும் பேட்டிங் ஆடும் திறன் கொண்டவர் என்பதாலேயே பிற பேட்ஸ்மேன்களை விடுத்து அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.