மும்பை : ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணி முழு வீச்சில் தயாராகி வருகிறது ஏற்கனவே பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்ற இந்திய அணி வங்கதேச அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி நல்ல உத்வேகத்துடன் இருக்கிறது.
இந்த போட்டியில் இந்திய அணியின் பெரும்பாலான வீரர்கள் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். எனினும் பிளேயிங் லெவனின் ஒரு விஷயத்தில் மட்டும் கொஞ்சம் பிரச்சனை இருக்கிறது. அதன்படி தொடக்க வீரராக பயிற்சி ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் களமிறங்கினார்.

ஆனால் அவர் 6 பந்துகளில் ஒரு ரன் மட்டும் தான் சேர்த்தார்.இந்த சூழலில் விராட் கோலி பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்காததால் தான் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் லீக் சுற்றில் அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலி அணிக்கு திரும்புவார்.
இதனால் அணியிலிருந்து வெளியேறப் போவது யார் என்று கேள்வி எழுந்துள்ளது. அது சஞ்சு சாம்சனா? இல்லை சிவம் துபேவா என்ற கேள்வி எழுந்துள்ளது. உதாரணத்திற்கு சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்க முடியாது. மேலும் ரிஷப் பண்ட், சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் நடு வரிசையில் நன்றாக விளையாடி இருக்கிறார்கள்.
அது மட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா பினிஷிங் ரோலில் தன்னுடைய பார்மை மீட்டு இருக்கிறார். இதன் காரணமாக சஞ்சு சாம்சனுக்கு நடுவரிசையில் இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஏற்கனவே பண்ட் என்ற ஒரு விக்கெட் கீப்பர் இருப்பதால் இரண்டாவது விக்கெட் கீப்பர் பிளேயிங் லெவனுக்கு தேவை இல்லை.
ஒருபுறம் இப்படி இருக்க மறுபுறம் சிவம் துபே, இடது கை பேட்ஸ்மேனாக நடுவரிசையில் விளையாடி வருகிறார். எனினும் அவர் கடந்த சில போட்டிகளாக பேட்டிங்கில் சரியான ஃபார்மில் இல்லாமல் தடுமாறி வருகிறார். பயிற்சி ஆட்டத்தில் கூட 16 பந்துகளை எதிர் கொண்டு 14 ரன்கள் மட்டும் தான் சேர்த்தார். ஆனால் பந்து வீச்சில் சிவம் துபே நன்றாகவே செயல்பட்டார்.
மூன்று ஓவர்கள் வீசி 13 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் சிவம் துபேவின் பந்துவீச்சு மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா போன்ற ஆடுகளங்களில் எடுபடும் என்று தெரியவந்துள்ளது. இதனால் சஞ்சு சாம்சனா சிவம் துபேவா என்று பார்க்கும் போது சிவம் துபேக்கு முன்னுரிமை தர வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் பந்தை வீணடிக்காமல் சிஎஸ்கேவுக்கு விளையாடுவது போல் அதிரடியாக விளையாடினால் இந்தியாவின் பலம் மேலும் அதிகரிக்கும்.