நார்த் சவுன்ட்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் "பி" பிரிவில் ஸ்காட்லாந்து மற்றும் ஓமன் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ஸ்காட்லாந்து அணி 151 ரன்கள் என்ற பெரிய இலக்கை வெறும் 13.1 ஓவரில் எட்டியது. இதன் மூலம் அதே குரூப்பில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் யுனைடெட் கிங்டம் நாட்டில் உள்ள கிரிக்கெட் அணிகளான இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் ஒன்றை ஒன்று காலை வாரி விட்டு வருகின்றன. முன்னதாக இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதிய போட்டி மழையால் கைவிடப்பட்டது. அதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

அடுத்து இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது. மறுபுறம் ஸ்காட்லாந்து அணி நமீபியா அணியை வீழ்த்தி இருந்தது. அடுத்து ஓமன் அணியை சந்தித்தது ஸ்காட்லாந்து. இந்த போட்டியில் ஸ்காட்லாந்து அணி அதிக நெட் ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் இங்கிலாந்து அணிக்கு சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்படும் என்ற நிலை இருந்தது.
எதிர்பார்த்தது போலவே ஸ்காட்லாந்து இந்தப் போட்டியில் ஓமன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஆனால், அதில் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அதிக நெட் ரன் ரேட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்று இருந்தது. இந்த போட்டியில் ஓமன் அணி 20 ஓவர்களில் 150 ரன்கள் சேர்த்தது. அதை சேஸிங் செய்த ஸ்காட்லாந்து அணி 13.1 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 41 பந்துகள் மீதம் இருந்த நிலையில் வெற்றி பெற்றிருந்தது.
அதன் காரணமாக தற்போது ஸ்காட்லாந்து அணி மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகள் பெற்று, ஒரு போட்டி கைவிடப்பட்டு மொத்தம் ஐந்து புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் முதல் இடத்தில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் 2.164 ஆக உள்ளது.
ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து மற்றும் ஓமன் அணிகளை வீழ்த்தியுள்ளது. அடுத்து நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளை ஆஸ்திரேலியா வீழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் குரூப் பி பிரிவில் முதல் இடம் பெற்று ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும்.
அந்த பிரிவில் இரண்டாவது இடத்தை பிடிக்க ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையில் போட்டி ஏற்படும். இங்கிலாந்து அணி அடுத்து நமீபியா மற்றும் ஓமன் அணிகளை சந்திக்க உள்ளது. அந்த இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றாலும், ஸ்காட்லாந்து அணியை விட அதிக நெட் ரன் ரேட் பெற வேண்டும். அந்த வகையில் இங்கிலாந்து அணி தற்போது சிக்கலில் உள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேட் மைனஸ் 1.8 ஆக உள்ளது. இதிலிருந்து ஸ்காட்லாந்து அணியின் பிளஸ் 2.164 என்ற நெட் ரன் ரேட்டை முந்த வேண்டும். அதற்கு அடுத்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். ஒருவேளை மழையால் ஒரு போட்டி தடைபட்டாலும் 2022 உலகக் கோப்பை சாம்பியனான இங்கிலாந்து அணி வீட்டுக்கு செல்ல வேண்டியதுதான்.