ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போக காரணமே இந்த சிஎஸ்கே வீரர்தான்.. என்ன நடந்தது?
மும்பை : 2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அதிரடி பேட்ஸ்மேன் ரிங்கு சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை. அவர் முதல் 15 வீரர்கள் கொண்ட அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அவரை மாற்று வீரர்கள் பட்டியலில் வைத்துள்ளது பிசிசிஐ.
இந்த முடிவு ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சுத்தமாக ஃபார்மில் இல்லாத ஹர்திக் பாண்டியா வேகப் பந்து வீசும் ஆல் - ரவுண்டர் என்ற அடிப்படையில் இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார். அதே சமயம், ஃபினிஷராக இரண்டு மாதங்கள் முன்பு வரை சர்வதேச போட்டிகளில் உச்சகட்ட ஃபார்மில் இருந்த ரிங்கு சிங் நீக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் ரிங்கு சிங்கை அணியில் இருந்து நீக்கக் காரணமே சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சிவம் துபே தான் என கூறப்படுகிறது. 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த ரிங்கு சிங் அந்த அணியில் ஆறு அல்லது ஏழாவது வரிசையில் தான் பேட்டிங் இறங்கினார். அவர் மொத்தமே 82 பந்துகள் மட்டுமே சந்தித்து இருக்கிறார்.
இந்த 82 பந்துகளில் அவர் 123 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 150 ஆக உள்ளது. இது மோசமான பேட்டிங் ஃபார்ம் என கூறி விட முடியாது. ரிங்கு சிங் தன் வழக்கமான அதிரடி ஆட்டத்தை ஆட முடியாமல் சற்று திணறினார் என்றாலும் கூட அவரது ஸ்ட்ரைக் ரேட் 150 ஆக இருப்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு ஐபிஎல் தொடரில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே உண்மை. கொல்கத்தா அணியில் முதல் ஐந்து இடங்களில் அதிரடி பேட்ஸ்மேன்கள் நிறைந்து உள்ளனர்.
உதாரணத்திற்கு இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பே இல்லாத ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் நிறைய பந்துகளை சந்தித்தனர். துவக்க வீரர்கள் பில் சால்ட் மற்றும் சுனில் நரைனும் நல்ல ஃபார்மில் இருந்ததால் அதிக பந்துகளை சந்தித்தார். இந்த ஐந்து விக்கெட்கள் வீழ்ந்தால் அல்லது கடைசி 2 -3 ஓவர்கள் மீதமிருக்கும் போது விக்கெட் விழுந்தால் ஆண்ட்ரே ரஸ்ஸல் களமிறங்கினார். இதனால் ரிங்கு சிங்கிற்கு பேட்டிங் செய்ய 82 பந்துகள் மட்டுமே கிடைத்தன.
மறுபுறம் ரிங்கு சிங்கிற்கு இணையாக இடது கை பேட்ஸ்மேனாக ஆடி வரும் சிவம் துபேவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நான்காம் வரிசை அல்லது ஐந்தாம் வரிசையில் பேட்டிங் இறங்க வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. அவர் 9 போட்டிகளில் 203 பந்துகளை சந்தித்து 350 ரன்கள் குவித்தார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 172 ஆகும். இந்த வித்தியாசம் தான் ரிங்கு சிங்கை நீக்கி விட்டு சிவம் துபேவை அணியில் சேர்க்க காரணம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications