டி20 உலகக்கோப்பை அணியிலும் இடம் கிடையாது.. 2 வீரர்களை கதற விட்ட பிசிசிஐ.. மெகா ட்விஸ்ட்
மும்பை : இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயருக்கு மேலும் ஒரு அடியாக அவர்கள் இருவரையும் 2024 டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யக் கூடாது என பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட்டில் ஐபிஎல் வரும் முன்பு வரை உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கே இந்திய அணியில் இடம் கிடைத்து வந்தது. சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஷ்மன், அனில் கும்ப்ளே, வீரேந்தர் சேவாக் என பல ஜாம்பவான்கள் அங்கிருந்து தான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால், 2008இல் ஐபிஎல் தொடர் உருவான பின் படிப்படியாக ஐபிஎல் தொடரின் செயல்பாட்டை வைத்து ஒருநாள் அணி மற்றும் டி20 அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படும் வகையில் இந்திய அணியின் நடைமுறை மாறியது. இந்த நிலையில், ரஞ்சி ட்ராபி தொடரின் முக்கியத்துவத்தை அதிகரிக்க முடிவு செய்த பிசிசிஐ அனைத்து இந்திய வீரர்களையும் ரஞ்சி ட்ராபி தொடரில் ஆடுமாறு வலியுறுத்தியது. இனி டெஸ்ட் அணியில் இடம் பெறும் வீரர்கள் நிச்சயம் ரஞ்சி ட்ராபியில் பங்கேற்க வேண்டும் என கூறியது.
ஆனால், இந்திய அணியில் சரியான வாய்ப்பு கிடைக்காத நிலையில் இஷான் கிஷன் 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்று தன்னை நிரூபித்து 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இடம் பெறலாம் என கணக்கு போட்டு ஐபிஎல் தொடருக்காக பயிற்சி செய்யத் துவங்கினார். அதனால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்க மறுத்தார்.
அதே போல, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சரியாக செயல்படாததால் நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரும் ரஞ்சி ட்ராபியில் பங்கேற்காமல் இன்னும் சில வாரங்களில் தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கு தயார் ஆனார். அதன் மூலம், தன் ஃபார்மை நிரூபித்து நேரடியாக 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இடம் பெறலாம் என முடிவு செய்தார்.
ஆனால், அவர்கள் இருவரின் நடவடிக்கையை தண்டிக்க முடிவு செய்த பிசிசிஐ அவர்களின் பிசிசிஐ ஆண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. அதனால், ஸ்ரேயாஸ் ஐயர் 3 கோடி சம்பளத்தையும், இஷான் கிஷன் 1 கோடி சம்பளத்தையும் இழந்தனர். இதுவே அவர்கள் மீதான அதிகபட்ச நடவடிக்கை என நினைத்த நிலையில், அவர்கள் இருவரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றாலும் அந்த செயல்பாட்டை மட்டும் வைத்து அவர்களை மீண்டும் இந்திய அணியில் சேர்க்கக் கூடாது எனவும், அவர்கள் ஐபிஎல் தொடருக்கு பின் நடக்க இருக்கும் உள்ளூர் போட்டிகளில் ஆடி அதில் சரியாக ரன் சேர்த்தால் மட்டுமே இந்திய அணியில் சேர்க்க வேண்டும் எனவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி 2024 ஐபிஎல் தொடர் முடிந்த உடன் 2024 டி20 தொடர் தொடங்கும் என்பதால் அந்த தொடருக்கான அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் இடம் பெற முடியாது என தகவல் வெளியாகி உள்ளது.
Story first published: Sunday, March 3, 2024, 13:25 [IST]
Other articles published on Mar 3, 2024


Click it and Unblock the Notifications