சென்னை : டி20 உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தென்னாப்பிரிக்கா அணியில் உள்ள பலம் மற்றும் பலவீனம் குறித்து பார்க்கலாம்.
தென்னாப்பிரிக்கா அணியின் கிரிக்கெட் வரலாற்றில் 1998ஆம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வெற்றி தான் உச்சப்பட்ச சாதனை. இதன்பின் தென்னாப்பிரிக்கா அணி விளையாடியுள்ள எந்த ஐசிசி தொடரிலும் ஒருமுறை கூட வென்றதில்லை. கடந்த உலகக்கோப்பை தொடரில் கூட தென்னாப்பிரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு வரும் என்று பார்க்கப்பட்ட சூழலில், ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை தொடரில் எய்டன் மார்க்ரம் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியுள்ளது. இதில் டி காக், கிளாசன், மில்லர், ஸ்டப்ஸ், ரிக்கல்டன், ஹென்ரிக்ஸ் ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களாக யான்சன், கோட்சியே, பார்ட்மேன், ரபாடா, நார்கியே ஆகியோர் இருக்கிறார்கள்.
ஸ்பின்னர்களாக ஷம்சி, கேசவ் மஹாராஜ், ஃபூசூன் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். ஆனால் ஆல்ரவுண்டரிகள் வரிசையில் நம்பிக்கையளிக்கும் வகையில் யாரும் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் கட்டர்ஸ் வீசும் பவுலர்களால் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியும். ஆனால் தென்னாப்பிரிக்கா அணியில் எல்லோரும் மணிக்கு 150 கிமீ வேகத்தில் வீசக்கூடியவர்களாக உள்ளனர்.
நார்கியே, ரபாடா ஆகியோர் டி20 கிரிக்கெட்டில் மோசமான ஃபார்மில் இருக்கின்றனர். இதனால் ஸ்பின்னர்கள் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் ஸ்டப்ஸ் மற்றும் கிளாசன் இருவரை தவிர்த்து மற்ற பேட்ஸ்மேன்களும் அனைவருமே ஸ்பின்னர்கள் எதிர்கொள்வதில் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.
2009 மற்றும் 2014 ஆகிய டி20 உலகக்கோப்பை தொடர்களில் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதி வரை முன்னேறியது. இதனால் நடப்பு சீசனில் தென்னாப்பிரிக்கா அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் யு19 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்காக கோப்பையை வென்று கொடுத்த மார்க்ரம் இம்முறை கேப்டன்சியை ஏற்றுள்ளதால், அந்நாட்டு ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.