இந்திய அணியில் தேர்வு செய்யலை.. எல்லை மீறிப் பேசிய இளம் வீரர்.. விளாசிய ஸ்ரீசாந்த்.. என்ன நடந்தது?
மும்பை: 2024 டி20 உலகக் கோப்பைக்கான அணியில் தன்னை தேர்வு செய்யாததால் உலகக்கோப்பை போட்டிகளை பார்க்க மாட்டேன் என கூறி இருந்தார் இளம் வீரர் ரியான் பராக். அவரை விளாசித் தள்ளி இருக்கிறார் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த். முதலில் நாட்டுப் பற்று இருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
முன்னதாக 2024 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆடிய ரியான் பராக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதற்கு முந்தைய ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் மிக மோசமாக செயல்பட்டு இருந்தார். அதனால் இணையத்தில் அவரை மோசமாக கேலியும், கிண்டலும் செய்து வந்தனர். அதில் இருந்து மீண்ட அவர் பின்னர் உள்ளூர் டி20 தொடர்களில் அதிரடி ஆட்டம் ஆடி பல்வேறு சாதனைகளை முறியடித்தார்.

சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் தொடர்ந்து 7 போட்டிகளில் அரை சதம் அடித்து பிரம்மாண்ட சாதனை செய்தார். அதன் பின் 2024 ஐபிஎல் தொடரிலும் அவர் சிறப்பாக செயல்பட்டிருந்தார். எனினும், அவருக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. 2024 டி20 உலகக் கோப்பைக்கான அணியிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் உலகக் கோப்பையின் போது அவர் அளித்த பேட்டி ஒன்றில், "நான் உலகக் கோப்பை போட்டிகளை பார்க்கப் போவதில்லை. இறுதிப் போட்டியை மட்டுமே பார்ப்பேன். நான் இப்போதெல்லாம் கிரிக்கெட் பார்க்கவே விரும்புவதில்லை. ஏனெனில், நான் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என எண்ணினேன். நாட்டுக்காக விளையாட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. எனவே, நான் போட்டிகளை பார்த்தால் நான் வேறு ஏதோ செய்து கொண்டிருக்கிறேன் என்று எனக்கு தோன்றும். உடனடியாக நான் வலைப் பயிற்சி செய்ய சென்று விடுவேன். ஏதோ தவறாக செய்கிறோம் அதனால் தான் அணியில் இடம் கிடைக்கவில்லை என்று எனக்கு தோன்றும். அதனால், வலைப் பயிற்சியில் பந்துகளை அடிக்கத் தொடங்கி விடுவேன்" என்று பேசி இருந்தார்.
அவரது இந்த பேச்சை சிலர் ஆதரித்தாலும், சிலர் இது தவறான எண்ணம் எனக் கூறி இருந்தனர். இந்திய அணியில் 15 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும். அதிலும் கூட சில வீரர்களுக்கு போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் போகலாம். இப்படி இருக்கும் போது தன்னை அணியில் தேர்வு செய்யவில்லை என்பதற்காக உலகக்கோப்பை போட்டிகளை பார்க்க மாட்டேன் என்ற ஒரு வீரர் கூறுவது இந்திய அணிக்கு எதிரான கருத்து என பலரும் விமர்சித்து வந்தனர்.
இது குறித்து பேசிய முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த், "சில இளம் வீரர்கள் தங்களை அணியில் தேர்வு செய்யாததால் உலகக் கோப்பை போட்டிகளை பார்க்க மாட்டோம் என்கிறார்கள். ஆனால், என்னை கேட்டால் நீங்கள் முதலில் நாட்டுப்பற்றுடன் இருங்கள். அதன் பிறகு கிரிக்கெட் ரசிகராக இருங்கள். யாரை இந்திய அணியில் தேர்வு செய்து இருக்கிறார்களோ, அவர்களுக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். உங்கள் முழு மனதுடன், முழு இதயத்துடன் அதை நீங்கள் செய்ய வேண்டும்" என்று கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications