சென்னை : டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலியா அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து பார்க்கலாம்.
உலகக்கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள ஆஸ்திரேலியா அணி, அடுத்ததாக டி20 உலகக்கோப்பை மீது பார்வையை திருப்பியுள்ளது. இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இங்கிலாந்து, நமீபியா, ஓமன் மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுடன் ஆஸ்திரேலியா அணி மோதவுள்ளது.

இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளிலேயே ஆஸ்திரேலியா அணி தான் சிறந்த பேலன்ஸை கொண்டுள்ளது. மிட்சல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர்களாக ட்ராவிஸ் ஹெட், டேவிட் வார்னர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் மிடில் ஆர்டரில் அதிரடிக்காக மிட்சல் மார்ஷ், கேமரூன் க்ரீன், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வேல், டிம் டேவிட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் மேத்யூ வேட் மற்றும் ஜோஷ் இங்லிஸ் இருவரும் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளனர். வேகப்பந்துவீச்சாளராக நேதன் எல்லீஸ், ஹேசல்வுட், மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஸ்பின்னர்களாக ஆடம் சாம்பா மற்றும் ஆஷ்டன் அகர் ஆகியோர் மட்டுமே உள்ளனர். இந்த அணியில் ஆல்ரவுண்டர்களாக மட்டும் கேமரூன் க்ரீன், ஸ்டாய்னிஸ் மற்றும் மேக்ஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனால் ஆஸ்திரேலியா அணியின் பிளேயிங் லெவனில் யார் சேர்க்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியா அணியில் இருக்கும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் விக்கெட் வீழ்த்தக் கூடிய ஸ்பின்னராக ஆடம் சாம்பா மட்டுமே உள்ளார். மற்றொரு ஸ்பின்னரான ஆஷ்டன் அகர் 2022ஆம் ஆண்டு முதல் டி20 கிரிக்கெட் பக்கமே வரவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஸ்பின்னர்களுக்கு நல்ல உதவி கிடைக்கும் என்பதால், இந்திய அணி 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்குகிறது. ஆனால் ஆஸ்திரேலியா அணி மீண்டும் வேகப்பந்துவீச்சாளர்களை நம்பியே களமிறங்குகிறது. மறுபக்கம் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக மிட்சல் மார்ஷ் இன்னும் போதுமான அனுபவத்தை பெறவில்லை.
அதற்குள் ஐசிசி தொடருக்கு தலைமை ஏற்க வைத்திருப்பது ஆஸ்திரேலியா ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் பேட் கம்மின்ஸ் அடுத்தடுத்து ஐசிசி கோப்பைகளை வென்றுள்ள நிலையில், ஆஸ்திரேலியா அணி நிர்வாகம் தேவையின்றி பரிசோதனை முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆனாலும் ஆஸ்திரேலியா அணியின் அனைத்து வீரர்களுமே சொல்லி அடிக்கும் கில்லி என்பதால், கோப்பையை வெல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் ஐசிசி தொடர்களில் ஆஸ்திரேலியா அணி கோப்பையை வெல்லவில்லை என்றால் தான் ஆச்சரியம். இருந்தாலும் ஸ்பின்னர்களின் பலவீனம் கண்கூடாக தெரிவதால், ஆஸ்திரேலியா அணியின் மாற்று திட்டம் என்ன என்பதே கேள்வியாக உள்ளது.