மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தை இன்று விளையாடுகிறது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகளுடன் இடம்பெற்றிருக்கிறது.
தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் அயர்லாந்துடன் இந்தியா விளையாடுகிறது. இந்திய அணி கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் முறையாக கோப்பையை வென்றது. அதன் பிறகு இறுதிப் போட்டிக்கு சென்று இருந்தாலும் மீண்டும் அந்த கோப்பை வெல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு இதுதான் கடைசி டி20 உலக கோப்பையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் இவ்வாறு இருந்தால் தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள வீடியோவில் இந்திய அணியின் தொடக்க ஜோடியை மாற்றி இருக்கிறார். பொதுவாக ரோகித் சர்மா ஜெய்ஸ்வால் தான் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கவாஸ்கர், விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், விராட் கோலி நல்ல ஃபார்மில் தொடக்க வீரராக தன்னை நிரூபித்து இருக்கிறார். இதனால் அவருக்குத்தான் அந்த இடத்தை வழங்க வேண்டும் என கூறியிருக்கிறார். இதேபோன்று மூன்றாவது வீரராக ஜெய்ஷ்வால் களமிறங்க வேண்டும் என கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். நம்பர் நான்காவது வீரராக சூரியகுமார் யாதவும், ஐந்தாவது வீரராக ரிஷப் பண்டும், ஆறாவது வீரராக ஹர்திக் பாண்டியாவும் விளையாட வேண்டும் என கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
ஏழாவது இடத்தில் ஜடேஜாவும் எட்டாவது இடத்தில் சிவம் துபேவும் இடம்பெற வேண்டும் என குறிப்பிட்டுள்ள கவாஸ்கர், ஒன்பதாவது இடத்தில் குல்தீப் யாதவ், 10வது இடத்தில் பும்ரா 11வது இடத்தில் சிராஜ் ஆகியோர் விளையாட வேண்டும் என கூறியிருக்கிறார். கவாஸ்கர் தேர்வு செய்துள்ள அணியில் சஞ்சு சாம்சன் மற்றும் இடது கை வேகப்பந்துவீச்சாளரான ஆர்ஸ்தீப் சிங் என இருவருக்குமே இடம் கிடைக்கவில்லை.