டி20 உலகக்கோப்பை வரலாற்றிலேயே படுமோசமாக சரிந்த விராட் கோலியின் பேட்டிங் சராசரி.. எவ்வளவு தெரியுமா?
மியாமி: இதுவரை நடந்த டி20 உலகக் கோப்பை தொடர்களிலேயே விராட் கோலி மிக மோசமான அளவில் பேட்டிங் ஆடி இருக்கிறார். அது குறித்த புள்ளி விவரம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது விராட் கோலி ரசிகர்களை உறைந்து போக வைத்து உள்ளது.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது குரூப் சுற்றில் நான்கு போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. முதல் மூன்று போட்டிகளில் அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகளை இந்தியா வீழ்த்தியது. கனடா அணிக்கு எதிராக நடக்க இருந்த நான்காவது போட்டி மழையால் கைவிடப்பட்டது.

இந்த குரூப் சுற்றில் விராட் கோலி மொத்தமாக 5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். கடந்த 2012 முதல் விராட் கோலி டி20 உலகக்கோப்பை தொடர்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இதுவரை இந்த உலகக் கோப்பை தொடர்களின் குரூப் சுற்றில் அவர் எடுத்த மிக மோசமான ஸ்கோர் இதுதான்.
2012ல் டி20 உலகக் கோப்பை குரூப் சுற்றில் இரண்டு இன்னிங்ஸ்களில் 90 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து 2014 இல் நான்கு இன்னிங்ஸ்களில் 170 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல 2016 இல் 4 இன்னிங்ஸ்களில் 184 ரன்களும், 2021 இல் மூன்று இன்னிங்ஸ்களில் 68 ரன்களும் எடுத்து இருக்கிறார். 2022-ல் உச்சம் தொட்ட விராட் கோலி ஐந்து இன்னிங்ஸ்களில் 246 ரன்கள் சேர்த்தார். அந்த ஆண்டு குரூப் சுற்றில் மட்டும் அவரது சராசரி 123 ஆக இருந்தது.
இந்த நிலையில் 2024 உலகக் கோப்பையில் குரூப் சுற்றில் மூன்று இன்னிங்ஸ்களில் அவர் 5 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதன் சராசரி 1.67 மட்டுமே. அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரு ரன்னும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக நான்கு ரன்களும், அமெரிக்க அணிக்கு எதிராக கோல்டன் டக் அவுட்டும் ஆகி இருந்தார் விராட் கோலி.
டி20 உலகக் கோப்பை தொடர்களின் குரூப் சுற்றில் விராட் கோலி எடுத்த ரன்கள் :
2012 - 2 இன்னிங்ஸ் - 90 ரன்கள் - 45.00 சராசரி
2014 - 4 இன்னிங்ஸ் - 170 ரன்கள் - 85.00 சராசரி
2016 - 4 இன்னிங்ஸ் - 184 ரன்கள் - 92.00 சராசரி
2021 - 3 இன்னிங்ஸ் - 68 ரன்கள் - 34.00 சராசரி
2022 - 5 இன்னிங்ஸ் - 246 ரன்கள் - 123.00 சராசரி
2024 - 3 இன்னிங்ஸ் - 5 ரன்கள் - 1.67 சராசரி
இதை அடுத்து விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருக்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள். அதே சமயம், இது குறித்து பேசிய முன்னாள் வீரர்கள் சிலர் மூன்று போட்டிகளில் விராட் கோலி சரியாக ஆடாவிட்டால், ரன் குவிக்காவிட்டால் அவர் ஃபார்ம் அவுட் ஆகி விட்டார் என சொல்ல முடியாது. அடுத்து வரும் சூப்பர் 8 போட்டிகளில் அவர் அதிரடியாக ரன் குவிப்பார் என நம்பிக்கை அளித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications