மும்பை : இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ப அமெரிக்காவுக்கு புறப்படுவது தொடர்பான தகவல் தெரிய வந்துள்ளது.
நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று முன் தினம் இந்திய வீரர்கள் அமெரிக்காவில் தரையிறங்கினர். இதன் வீடியோவும் வெளியாகியது.

ஆனால் ஐபிஎல் தொடர் காரணமாக இன்னும் சில வீரர்கள் இந்திய அணியுடன் இணையவில்லை. சஞ்சு சாம்சன், சாஹல், ஆவேஷ் கான் உள்ளிட்டோர் நேற்று அமெரிக்காவுக்கு புறப்பட்ட நிலையில், ரிங்கு சிங் இன்று புறப்படவுள்ளார். அதேபோல் லண்டனில் இருந்த நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியாவும் இந்திய அணியுடன் இணைந்தது தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் சீனியர் வீரரான விராட் கோலி மட்டும் இன்னும் இந்திய அணியுடன் இணையாமல் இருக்கிறார். இதுதொடர்பாக ஏற்கனவே பிசிசிஐ நிர்வாகிகளிடம், இந்திய அணி நிர்வாகத்திற்கும் விராட் கோலி தகவல் தெரிவித்துவிட்டார். சொந்த பணிகள் காரணமாக தாமதமாக இணைவதாக கூறிய விராட் கோலியின் கோரிக்கையை பிசிசிஐ நிர்வாகமும் ஏற்றுக் கொண்டது.
இதனிடையே ஜூன் 1ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடவுள்ளது. இந்த பயிற்சி போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் விராட் கோலி எப்போது அமெரிக்கா புறப்படுவார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இம்மாத இறுதிக்குள் இந்திய அணியுடன் விராட் கோலி இணைவார் என்று தெரிய வந்துள்ளது.
ஆனால் வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விராட் கோலி விளையாடுவாரா என்பது அணி நிர்வாகத்தின் முடிவு தான் என்று கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக ஆடிய விராட் கோலி 15 இன்னிங்ஸ்களில் விளையாடி 741 ரன்களை விளாசினார். இதனால் டி20 உலகக்கோப்பை தொடரிலும் விராட் கோலியின் ஃபார்ம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.