மும்பை : இந்திய டி20 அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா 2024 டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். ஆனால், அவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் அணியில் ஆட வைப்பது கடினம் என தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த கடினமான விஷயத்தை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவிடம் கூறப்போவது பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தான். அவர்கள் இருவரில், யாராவது ஒருவரை டி20 அணியில் இருந்து விலகுமாறு அவர் கூறப் போகிறார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏன் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் ஒரே நேரத்தில் அணியில் ஆட முடியாது? இதற்கான பதில் 2022 டி20 உலகக்கோப்பை தொடரில் இருக்கிறது. அந்த தொடரில் இந்திய அணியில் இடது கை பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் மட்டுமே இடம் பெற்றார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் வலது கை ஆட்டக்காரர்கள் தான். அதனால், சில முக்கிய எதிரணிகளான தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, போன்ற அணிகள் இடது கை பந்துவீச்சாளர்களை வைத்து இந்திய அணியை வீழ்த்தியது. இந்தியா அப்போது அரை இறுதியுடன் வெளியேறி இருந்தது.
அந்த உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய டி20 அணியில் முக்கிய மாற்றங்களை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அணியில் துவக்கம் மற்றும் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்கள் இருந்தே ஆக வேண்டும் என்ற நிலை கொண்டு வரப்பட்டது. துவக்க வீரராக இடது கை பேட்ஸ்மேன் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும், மிடில் ஆர்டரில் இஷான் கிஷன், ரிங்கு சிங் ஆகியோரும் டி20 அணியில் சேர்க்கப்பட்டனர். அதே சமயம், இளம் அணியை தயார் செய்யும் வகையில், மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி டி20 அணியில் இருந்து சிறிது காலம் விலகி இருந்தனர்.
இடது கை பேட்ஸ்மேன்களை ஆட வைக்கும் திட்டம் இன்னும் முழுமை அடையாத நிலையில், திடீரென ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி மீண்டும் 2024 டி20 உலகக்கோப்பையில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர். அவர்களை அணியில் சேர்த்தால் துவக்க வீரர்கள் ஜெய்ஸ்வால், ருதுராஜ், சுப்மன் கில் ஆகிய மூவரில் ஒருவர் மட்டுமே அணியில் இடம் பெற முடியும். இதில் ஜெய்ஸ்வால் இடது கை பேட்ஸ்மேன் என்பதால் வாய்ப்பு பெறக் கூடும். ஆனால், ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா என இருவருமே விக்கெட் போனாலும் சரி, முதல் பந்தில் இருந்தே அடித்து ஆட வேண்டும் என்ற பாணியை கொண்டவர்கள். இது அணியின் சமநிலையை பாதிக்கும்.
அதே போல, விராட் கோலி மிடில் ஆர்டரில் இடம் பெற்றால் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் மட்டுமே அணியில் இடம் பெற முடியும். இடது கை பேட்ஸ்மேன் ஆன இஷான் கிஷன் அணியில் வாய்ப்பை இழப்பார். அது மட்டுமின்றி, ஸ்ரேயாஸ் ஐயர், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோரில் யாரை அணியில் சேர்ப்பது என்ற குழப்பம் ஏற்படும். எனவே, விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா ஆகிய இருவரில் ஒருவரை மட்டும் அணியில் வைத்துக் கொண்டு கூடுதலாக ஒரு இடது கை பேட்ஸ்மேனை ஆட வைக்க வேண்டும் என்பதே தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரின் திட்டமாக உள்ளது. அவர் இதை செய்யவே கடந்த ஓராண்டாக அணித் தேர்வில் இடது கை வீரர்களை தேடி எடுத்து தேர்வு செய்து வந்தார். தன் பணியை சரியாக முடிக்க வேண்டும் என அவர் நினைக்கிறார்.
அதே சமயம், ரோஹித் சர்மா, விராட் கோலியிடம் அணியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கூறும் இடத்தில் அவர் இல்லை. எனவே, இந்த விவகாரத்தை அவர் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் எடுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஜெய் ஷா, தற்போது ரோஹித் அல்லது கோலி ஆகிய இருவரில் ஒருவரை அணியில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கூற வாய்ப்பு உள்ளது. அது மட்டும் நடந்தால் ரோஹித் - கோலி ரசிகர்கள் இடையே சமூக ஊடகங்களில் பெரும் எதிர்ப்பலை, விமர்சனம் கிளம்பும். அதை எப்படி சமாளிக்கப் போகிறது பிசிசிஐ?