நியூயார்க்: ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த மைதானத்தில் விளையாடினாலும் அங்கு தோனி ரசிகர்கள் மைதானம் முழுவதும் நிறைந்து இருப்பார்கள். தற்போது அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் பயிற்சிப் போட்டியிலும் தோனி ரசிகர்கள் சிலர் மைதானத்தில் அவர்கள் "மிஸ்" செய்வதாக பதாகை ஏந்தி வந்திருந்தனர்.
2024 டி20 உலகக் கோப்பை தொடர் ஜூன் 2 முதல் துவங்க உள்ளது. அதற்கு முன்னதாக பயிற்சிப் போட்டிகள் நடைபெற்றன. இந்திய அணி, வங்கதேச அணிக்கு எதிராக மட்டும் ஒரே ஒரு பயிற்சிப் போட்டியில் ஆடியது. இந்தப் போட்டி நியூயார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியை காண சுமார் 20,000 ரசிகர்கள் வந்திருந்தனர். ஒரு பயிற்சி போட்டிக்கு இத்தனை ஆயிரம் ரசிகர்கள் வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் போட்டி துவங்கியவுடன் ஒரு சிறு ரசிகர் கூட்டம், "வி மிஸ் யூ தோனி" (We Miss You) என்ற பதாகையை ஏந்திக் கொண்டு நின்று இருந்தனர். அது இந்திய ரசிகர்களை கவர்ந்தது. கபில் தேவுக்கு பின் இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்த ஒரே கேப்டன் தோனி மட்டுமே. அதிலும் ஒன்று அல்ல, மூன்று ஐசிசி கோப்பைகளை அவர் வென்று கொடுத்தார்.
அவர் 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி என மூன்று முக்கிய ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார். அதன் பின் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தும் அவர்களால் உலகக் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் தான் தற்போது நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன் தோனி ரசிகர்கள், "வீ மிஸ் யூ தோனி" என்ற பதாகையை ஏந்தி நின்று இருந்தனர். இதை பார்த்த ரசிகர்கள் சிலர் சமூக வலைதளத்தில், "இது என்ன சிஎஸ்கே மேட்ச்சா?" என்று கேள்வி எழுப்பினர். அதே சமயம் இது தோனி ரசிகர்களை நெகிழ வைப்பதாக இருந்தது.