நியூயார்க் : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11ல் குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் என்ற விவாதம் தொடங்கியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது. நியூயார்க் மைதானத்தில் நடக்கும் போட்டி என்பதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இந்திய அணி ஏற்கனவே நியூயார்க் மைதானத்தில் 2 போட்டிகளில் விளையாடிய அனுபவத்துடன் களமிறங்கவுள்ளது. மறுமுனையில் பாகிஸ்தான் அணி நியூயார்க் பிட்சில் முதல்முறையாக விளையாடவுள்ளது.

நியூயார்க் பிட்சை பொறுத்தவரை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவியாக இருந்தாலும், பந்து பழையதாக மாறிய பின் ஸ்பின்னர்களுக்கு உதவி செய்யும் என்று தெரிய வருகிறது. இதனால் இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களாக இருக்கும் ஜடேஜா, அக்சர் படேல் ஆகிய இருவரில் ஒருவரை மட்டும் சேர்க்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. மற்றொரு ஸ்பின்னராக குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று விவாதங்கள் எழுந்துள்ளன.
ஏனென்றால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிகளில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஏனென்றால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான 6 போட்டிகளில் விளையாடியுள்ள குல்தீப் யாதவ் மொத்தமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கடந்த ஆண்டு விளையாடிய 9 டி20 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் கடந்த 1.5 ஆண்டுகளாக இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக குல்தீப் யாதவ் விக்கெட் வேட்டை நடத்தி வருகிறார்.
இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் பாகிஸ்தான் அணியில் ஃபகர் ஜமான் மற்றும் இஃப்திகர் அஹ்மத் ஆகிய இருவரும் ஸ்பின்னர்களுக்கு திணறுவார்கள் என்பதும் குல்தீப் யாதவை சேர்க்க வேண்டும் என்ற விவாதத்திற்கு வலு சேர்க்கிறது. இதனால் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரின் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.