WI vs AFG: 2 ரன்னில் போச்சே.. பழி வாங்கிய ஆப்கன் பவுலர்.. நொந்து போன நிக்கோலஸ் பூரன்.. என்ன நடந்தது?
செயின்ட் லூசியா: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் சுற்றின் கடைசி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக ஆடி ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தது.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் நிக்கோலஸ் பூரன் இரண்டு ரன்களில் சதத்தை தவறவிட்டார். கடைசி ஓவரில் அவர் ரன் அவுட் ஆகி தனது சதத்தை தவற விட்டு அதிருப்தியுடன் வெளியேறினார். அவரை ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் ஹஸ்மத்துல்லா ஓமர்ஜாய் ரன் அவுட் செய்து பழி வாங்கினார்.

முன்னதாக அவரது ஓவரில் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடி இருந்தார். அந்த ஓவரில் மட்டும் 36 ரன்கள் கொடுத்து மோசமான சாதனையை நிகழ்த்தி இருந்தார் ஹஸ்மத்துல்லா ஓமர்ஜாய். அதற்கு பழி வாங்கும் வகையில் நிக்கோலஸ் பூரன் சதத்தை நிறைவு செய்ய விடாமல் செய்தார்.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் பிராண்டன் கிங் 7 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த ஜான்சன் சார்லஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை அடித்து துவைத்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது இந்த ஜோடி.
ஜான்சன் சார்லஸ் 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். நிக்கோலஸ் பூரன் அதிரடியாக ஆடினார், அவர் ஹஸ்மத்துல்லா ஓமர்ஜாய் வீசிய நான்காவது ஓவரில் மூன்று ஃபோர் மற்றும் மூன்று சிக்ஸ் அடித்தார். அந்த ஓவரில் ஒரு நோ பால் மற்றும் ஒரு வைடு வீசினார் ஹஸ்மத்துல்லா. அந்த வைடு பந்து பவுண்டரிக்கு சென்றதால் ஐந்து ரன்கள் கிடைத்தது. ஆக மொத்தத்தில் அந்த ஓவரில் மட்டும் 36 ரன்கள் கொடுத்திருந்தார் ஹஸ்மத்துல்லா ஓமர்ஜாய். அதன் பின் அவருக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
தொடர்ந்து அதிரடியாக ஆடிவந்த நிக்கோலஸ் பூரன் 19வது ஓவரின் முடிவில் 85 ரன்கள் எடுத்திருந்தார். கடைசி ஓவரில் மட்டும் 15 ரன்கள் எடுத்து அவர் சதத்தை நிறைவு செய்வாரா? என்று எதிர்பார்ப்பு இருந்தது. இதற்கிடையே கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்த அவர் நான்காவது பந்தில் இரண்டு ஓட முயன்றார். ஆனால் இரண்டாவது ரன்னை அவர் முடிக்கும் முன் ஹஸ்மத்துல்லா ஓமர்ஜாய் அபாரமாக ஃபீல்டிங் செய்து அவரை ரன் அவுட் செய்தார். இதை அடுத்து 98 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார் பூரன். இரண்டு ரன்களில் சதத்தை தவறவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்தது.


Click it and Unblock the Notifications