பிராவிடன்ஸ் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் உகாண்டா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக ஆடியது.
அந்த அணியின் ஜான்சன் சார்லஸ் 44 ரன்கள், ஆண்ட்ரே ரஸ்ஸல் 30 ரன்கள் சேர்த்தனர். நிக்கோலஸ் பூரான் 22, ரோவ்மன் பாவல் 23, ஷெர்பேன் ரூதர்போர்டு 22 ரன்கள் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது.

உகாண்டா அணியின் பந்துவீச்சில் அல்பேஷ் ராம்ஜானி 3 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். கேப்டன் பிரையன் மசாபா 4 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்கள் வீழ்த்தினார், தினேஷ் நக்ராணி 3 ஓவர்களில் 20 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார். மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் ரன்களை வாரி இறைத்திருந்தனர்.
அடுத்து உகாண்டா அணி சேஸிங் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக சுழற் பந்துவீச்சாளர் அகீல் ஹுசைனை முதல் ஓவரை வீசச் செய்தது. அவரது ஓவரில் உகாண்டா அணி முதல் விக்கெட்டை இழந்தது. அதன் பின் வரிசையாக விக்கெட்களை வீழ்த்தி ஆதிக்கம் செலுத்தியது வெஸ்ட் இண்டீஸ். உகாண்டா அணி 12 ஓவர்களில் 39 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது.
அகீல் ஹுசைன் அபாரமாக பந்து வீசி நான்கு ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். ரொமாரியோ ஷெப்பர்ட் 1, ஆண்ட்ரே ரஸ்ஸல் 1. அல்சாரி ஜோசப் 2, குடகேஷ் மோட்டி 1 விக்கெட் வீழ்த்தினர். டி20 உலக கோப்பை வரலாற்றிலேயே மிகக் குறைந்த ரன் எடுத்த அணிகளின் பட்டியலில் நெதர்லாந்து அணியுடன் இணைந்தது உகாண்டா அணி.
கடந்து 2014 ஆம் ஆண்டு நெதர்லாந்து 39 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது. சரியாக 10 ஆண்டுகள் கழித்து உகாண்டா அணி 39 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி உள்ளது. இந்தப் போட்டியில் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் சர்வதேச டி20 போட்டிகளில் இதுவே வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிகப்பெரிய வெற்றியாகும்.