இந்திய டி20 அணிக்கு ஒரு நல்ல கேப்டன் தேவை.. அது இவர்தான்.. யுவராஜ் சிங் ஓபன் டாக்
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் இரண்டு உலகக் கோப்பை வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய உலகக் கோப்பை நாயகன் யுவராஜ் சிங் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட இருக்கும் ரோஹித் சர்மா குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் 2024 ஐபிஎல் தொடர் முடிந்தவுடன் 2024 டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அதற்கான இந்திய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்க உள்ளது. அது குறித்து யுவராஜ் சிங்கிடம் ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பிய போது, "ரோஹித் சர்மா இந்திய அணியில் இருப்பது மிகவும் முக்கியமானது. நமக்கு நல்ல கேப்டன் தேவை. அழுத்தமான சூழ்நிலைகளின் போது விவேகமான முடிவுகள் எடுக்கக்கூடிய கேப்டன் தேவை. அது ரோஹித் சர்மா தான்." என பதில் அளித்தார்.

மேலும், "2023 ஒரு நாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை அழைத்து சென்றது ரோஹித் சர்மா தான். அவர் ஐபிஎல் தொடரில் கேப்டனாக 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அவரைப் போன்ற ஒரு கேப்டன் தான் இந்திய அணிக்கு தேவை. ரோஹித் சர்மாவை உலகக்கோப்பையுடன் பார்க்க விரும்புகிறேன். உலகக் கோப்பை பதக்கத்தை அவர் அணிய வேண்டும். அதற்கு அவர் தகுதியானவர்" என யுவராஜ் சிங் கூறினார்.
மேலும், "ரோஹித் சர்மா வெற்றிகளை பெற்ற பின்னும் இன்னும் மாறவில்லை. அதுதான் ரோஹித் சர்மாவின் அழகு. எப்போதும் வேடிக்கையாகவும், சக வீரர்களுடன் விளையாட்டாகவும் நடந்து கொள்வார். ஆடுகளத்தில் மிகச்சிறந்த தலைவராக இருப்பார். கிரிக்கெட்டில் எனது மிக நெருங்கிய நண்பர்களில் அவரும் ஒருவர்." என்றார் யுவராஜ் சிங்.
2024 டி20 உலகக்கோப்பை தொடரின் விளம்பரத் தூதராக யுவராஜ் சிங்கை அறிவித்தது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில். இந்திய அணிக்காக இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட வீரர், 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் போன்ற காரணங்களால் யுவராஜ் சிங்கிற்கு இந்த மரியாதைக்குரிய பதவி அளிக்கப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறி இருந்தது.


Click it and Unblock the Notifications