17 ஆண்டுகள் கழித்து உலகக்கோப்பையை கையில் எடுத்த யுவராஜ் சிங்.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்
நியூயார்க் : 2024 டி20 உலகக்கோப்பையுடன் யுவராஜ் சிங் இருக்கும் புகைப்படங்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. சுமார் 17 ஆண்டுகளுக்கு முன் 2007 டி20 உலகக்கோப்பை வென்ற அணியில் இடம் பெற்ற யுவராஜ் சிங் கோப்பையை தன் கையில் ஏந்தி இருந்தார்.
அதன் பின் 17 ஆண்டுகள் கழித்து தற்போது 2024 டி20 உலகக்கோப்பை தொடரின் விளம்பரத் தூதராக அந்த கோப்பையை தன் கையில் ஏந்தினார். அமெரிக்காவில் நடைபெற உள்ள மியாமி கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தின் கோப்பை அறிமுகம் செய்த நிலையில் அத்துடன் ஃபார்முலா 1 பந்தயத்தின் கோப்பையும் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த இரண்டு கோப்பைகளுடன் மூன்றாவதாக டி20 உலகக்கோப்பை தொடருக்கான கோப்பையும் அறிமுகம் செய்யப்பட்டது.

விளம்பரத் தூதராக யுவராஜ் சிங் முன் நின்று 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான கோப்பையை அறிமுகம் செய்து தன் கையில் ஏந்தினார். அந்த புகைப்படம் தான் இப்போது ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. 17 ஆண்டுகள் முன்பு 2007 டி20 உலகக்கோப்பையை யுவராஜ் சிங் தன் கையில் ஏந்தி இருந்த புகைப்படத்தையும், இந்த புகைப்படத்தையும் சேர்த்து வைத்து பலரும் பழைய உலகக்கோப்பை நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். முதல் டி20 உலகக்கோப்பை தொடரில் கோப்பை வென்ற இந்திய அணி அதன் பின் டி20 உலகக்கோப்பையை கைப்பற்றவில்லை. இந்த முறையாவது இந்திய அணி டி20 உலகக்கோப்பை வெல்ல வேண்டும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
2024 டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் துவங்க உள்ளது. முதல் போட்டியில் தொடரை நடத்தும் அமெரிக்காவுடன், கனடா அணி மோத உள்ளது. ஜூன் 5 அன்று இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியுடன் மோத உள்ளது. கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி ஜூன் 9 அன்று நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது.
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.


Click it and Unblock the Notifications