டி20 உலகக்கோப்பை ஃபைனலுக்கு ஆஸ்திரேலியா போனால்.. இந்திய அணிக்கு ஆப்பு? யுவராஜ் சிங் அதிரடி
நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் எந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற கேள்விக்கு யுவராஜ் சிங் பதில் அளித்தார். அப்போது எந்த அணி இறுதி போட்டிக்கு முன்னேறினாலும் ஆஸ்திரேலியா மட்டும் முன்னேறி விடக் கூடாது என அவர் கூறினார்.
2024 டி20 உலகக் கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான விளம்பர தூதர்களில் ஒருவராக யுவராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரிடம் எந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த யுவராஜ் சிங், "இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்று நான் நம்புகிறேன். அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா மற்றும் இறுதி போட்டிக்கு முன்னேறி விடக்கூடாது" என்று கூறி சிரித்தார்.

இதற்கு முக்கிய காரணம் கடந்த காலங்களில் இந்திய அணி எப்போதெல்லாம் உலகக்கோப்பை தொடர்களின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்ததோ, அப்போது எல்லாம் ஆஸ்திரேலியாவும் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்திய அணியை வீழ்த்தி இருக்கிறது. 2003 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை என மூன்று முறை இது போல நடந்துள்ளது. அதன் காரணமாக அவர் இவ்வாறு நகைச்சுவையாக கூறினார்.
மேலும், இந்த ஆண்டு உலகக் கோப்பை தொடரில் எந்த வீரரை நீங்கள் உற்று நோக்குகிறீர்கள்? எந்த வீரர் அதிக ரன் குவிப்பார்? என்ற கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு, "நான் ரிஷப் பண்டை தான் உற்று நோக்குவேன். அவர் நீண்ட காலத்திற்கு பின் மீண்டும் கிரிக்கெட் ஆடி வருகிறார். மிகப் பெரிய விபத்தில் இருந்து மீண்டு இருக்கிறார். எனவே, அவரை நான் கவனிப்பேன். இந்த தொடரில் விராட் கோலி தான் அதிக ரன் குவிப்பார் என்று நான் நினைக்கிறேன். அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டார்" என்றார் யுவராஜ் சிங்.
அடுத்து இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்று கேள்விக்கு பதில் அளித்த யுவராஜ் சிங், "எந்த அணி 100 சதவீதம் தங்கள் பங்களிப்பை அளிக்கிறதோ, எந்த அணி தங்கள் உணர்ச்சிகளை சரியாக கட்டுப்படுத்தி ஆடுகிறதோ, போட்டி சூழ்நிலையில் எந்த அணி கவனத்தை குவித்து ஆடுகிறதோ, அந்த அணிதான் வெற்றி பெறும். கடந்த சில ஆண்டுகளில் நாம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நல்ல ரெக்கார்டை வைத்துள்ளோம். அது இப்போதும் தொடரும் என்று நம்புகிறேன். நான் இதுவரை இந்தியா - பாகிஸ்தான் போட்டிகளை டிவியில் தான் பார்த்திருக்கிறேன். இப்போதுதான் முதன்முறையாக நேரில் பார்க்க போகிறேன்" என்றார் யுவராஜ் சிங்.


Click it and Unblock the Notifications