Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய வம்சாவளி அதிகாரிக்கு விசா தர மறுத்த வங்கதேசம்.. ஐசிசி பேச்சுவார்த்தை திட்டத்துக்கு சிக்கல்

டாக்கா: 2026 டி20 உலகக்கோப்பை தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) மற்றும் வங்கதேச அரசு எல்லை மீறி சில செயல்களை செய்து வருகின்றன. பாதுகாப்பு காரணம் என்று கூறி டி20 உலகக்கோப்பை ஆட இந்தியாவிற்கு வர மறுத்துவரும் வங்கதேசம், தற்போது சமாதானம் பேச வந்த ஐசிசி குழுவில் இடம்பெற்றிருந்த இந்திய வம்சாவளி அதிகாரிக்கு விசா வழங்க மறுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி 7-ம் தேதி உலகக்கோப்பை தொடங்கவுள்ள நிலையில், வங்கதேசத்தின் இந்த அடாவடிப் போக்கு ஐசிசி-யை கடும் தலைவலியில்த் தள்ளியுள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டிகளை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்துகின்றன.

T20 World Cup 2026 Bangladesh Denies Visa to Indian-Origin ICC Official Amid Security Row

இதில் வங்கதேச அணி தனது லீக் போட்டிகளை இந்தியாவின் கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், "நாங்கள் இந்திய மண்ணில் விளையாட மாட்டோம்; எங்கள் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுங்கள்" என்று வங்கதேசம் பிடிவாதம் பிடித்து வருகிறது. இந்தப் பிரச்சனையைத் தீர்த்து, வங்கதேசத்தை இந்தியாவிற்கு வர சம்மதிக்க வைப்பதற்காக ஐசிசி (ICC) ஒரு உயர்மட்டக் குழுவை டாக்காவிற்கு அனுப்பத் திட்டமிட்டது.

இந்தக் குழுவில் ஐசிசி-யின் மூத்த அதிகாரி ஒருவர் இடம்பெற்றிருந்தார். அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அவருக்கு வங்கதேச அரசு விசா வழங்க மறுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் டாக்காவிற்குச் செல்ல முடியவில்லை.

இதன் விளைவாக, ஐசிசி-யின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பிரிவின் தலைவரான ஆண்ட்ரூ எஃப்கிரேவ் மட்டும் தனியாளாக டாக்கா சென்றுள்ளார். இந்திய ஐசிசி அதிகாரி ஒருவருக்கு விசா மறுக்கப்பட்ட விவகாரம் இந்தியா - வங்கதேசம் இடையிலான உறவில் விரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

தனியாகச் சென்றுள்ள ஆண்ட்ரூ எஃப்கிரேவ், வங்கதேச கிரிக்கெட் வாரியம் மற்றும் அந்நாட்டு விளையாட்டு அமைச்சக அதிகாரிகளைச் சந்தித்துப் பேசவுள்ளார். "இந்தியாவில் வங்கதேச வீரர்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும்" என்ற உறுதியையும், அதற்கான விரிவான பாதுகாப்புத் திட்டத்தையும் அவர் சமர்ப்பிக்க உள்ளார்.

ஐசிசி அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியாவைச் சேர்ந்த ஜெய் ஷா இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஐசிசி அமைப்பை தடுப்பதன் மூலம் இந்தியாவிற்கு எதிரான தனது எதிர்ப்பை வங்கதேச அரசு பதிவு செய்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னைக்கு மாறுமா போட்டிகள்?

வங்கதேச அணி கொல்கத்தா மற்றும் மும்பையில் விளையாட மறுத்தால், மாற்றாகச் சென்னை அல்லது திருவனந்தபுரத்தில் போட்டிகளை நடத்த ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆலோசித்து வருகின்றன. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் (TNCA), கேரள கிரிக்கெட் சங்கமும் (KCA) போட்டிகளை நடத்தத் தயார் என்று ஒப்புதல் கூறி உள்ளன. ஆனால், வங்கதேசமோ இந்திய எல்லைக்குள்ளேயே கால் வைக்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

வங்கதேசத்தின் போட்டி அட்டவணை (தற்போதைய திட்டப்படி):

பிப் 7: வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம் (ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா)
பிப் 9: வங்கதேசம் vs இத்தாலி (ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா)
பிப் 14: இங்கிலாந்து vs வங்கதேசம் (ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா)
பிப் 17: வங்கதேசம் vs நேபாளம் (வான்கடே, மும்பை)

உலகக்கோப்பை நெருங்கும் நேரத்தில் வங்கதேசம் காட்டி வரும் இந்த பிடிவாதம், தொடருக்கே பெரிய சிக்கலை உண்டாக்கியுள்ளது. ஐசிசி அதிகாரியின் பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Saturday, January 17, 2026, 15:59 [IST]
Other articles published on Jan 17, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+