மும்பை: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடரின் 4வது நாளில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மூன்று முக்கியமான போட்டிகள் நடைபெறவுள்ளன. டெல்லி, சென்னை மற்றும் கொழும்பு ஆகிய மூன்று நகரங்களில் நடைபெறும் இந்தப் போட்டிகளில், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் போன்ற பெரிய அணிகள் தங்கள் சூப்பர் 8 வாய்ப்பை உறுதி செய்யக் களமிறங்குகின்றன.
நேரம்: இன்று காலை 11:00 மணி (இந்திய நேரம்)
இடம்: அருண் ஜெட்லி மைதானம், டெல்லி
பிரிவு: குரூப் ஏ
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார்
நெதர்லாந்து அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் நூலிழையில் தோல்வியடைந்தது. இருப்பினும், அந்தப் போட்டியில் நெதர்லாந்து வீரர்கள் வெளிப்படுத்திய ஆக்ரோஷம் அனைவரையும் கவர்ந்தது. நமீபியாவை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்ய அந்த அணி துடிக்கிறது.
மறுபுறம், நமீபியா அணி இந்தத் தொடரில் தனது முதல் போட்டியில் களமிறங்குகிறது. கடந்த முறை ஆசிய கோப்பை சாம்பியனான இலங்கையை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த வரலாறு நமீபியாவுக்கு உண்டு. எனவே, இந்த ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெதர்லாந்து - நமீபியா மோத உள்ள டெல்லி ஆடுகளம் பொதுவாக பேட்டிங்கிற்குச் சாதகமானது. முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 165 ரன்களாக உள்ளது. ஆனால், பகல் நேரப் போட்டிகளில் சராசரி ஸ்கோர் 148 ஆகக் குறைகிறது. எனவே டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்யவே விரும்பும். வானிலை தெளிவாக இருக்கும்.

நேரம்: இன்று மதியம் 3:00 மணி (இந்திய நேரம்)
இடம்: எம்.ஏ. சிதம்பரம் மைதானம், சென்னை
பிரிவு: குரூப் டி
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார்
நியூசிலாந்து அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று சூப்பர் 8 வாய்ப்புய உறுதி செய்ய அந்த அணி திட்டமிட்டுள்ளது. டிம் செய்ஃபெர்ட், டேரில் மிட்செல் போன்ற அதிரடி வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். ஐக்கிய அரபு அமீரக அணிக்கு இது ஒரு சவாலான போட்டி. நியூசிலாந்து போன்ற பலமான அணியைச் சமாளிக்க அந்த அணி கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.
நியூசிலாந்து - அமீரகம் மோத உள்ள சென்னை ஆடுகளம் வழக்கம் போலச் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும். அதே சமயம், இங்கு விளையாடிய 4 டி20 போட்டிகளில் 3 முறை இரண்டாவது பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. எனவே, டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசவே முடிவு செய்யும்.
நேரம்: இன்று இரவு 7:00 மணி (இந்திய நேரம்)
இடம்: சிங்களா விளையாட்டு மைதானம், கொழும்பு
பிரிவு: குரூப் ஏ
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார்
பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தியிருந்தாலும், அந்த வெற்றி திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. பேட்டிங்கில் ஏற்பட்ட தடுமாற்றம் அந்த அணிக்குக் கவலையை அளித்துள்ளது. மிகவும் போராடித் தான் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. எனவே, இந்தியாவுடனான போட்டிக்கு முன்னதாக, அமெரிக்காவை வீழ்த்திப் புள்ளிப்பட்டியலில் முன்னேற பாகிஸ்தான் தீவிரமாக உள்ளது.
அமெரிக்க அணி தனது முதல் போட்டியில் பந்துவீச்சில் இந்திய அணியை அலறவிட்டது மறக்க முடியாது. கடந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாறு படைத்த அமெரிக்கா, இம்முறையும் அதே போன்ற ஒரு அதிர்ச்சியை அளிக்கக் காத்திருக்கிறது. சவுரப் நேத்ரவல்கர் போன்ற பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தானுக்குச் சவால் அளிப்பார்கள்.
பாகிஸ்தான் - அமெரிக்கா மோத உள்ள கொழும்பு ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும். முதல் இன்னிங்ஸ் சராசரி ஸ்கோர் 147 ரன்கள் மட்டுமே. எனவே, 160 ரன்களுக்கு மேல் குவித்தால் அது வெற்றிக்குப் போதுமானதாக இருக்கும். வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை வர வாய்ப்பில்லை.